வெள்ளி, ஏப்ரல் 24, 2009

அமெரிக்காவில் பறந்த அபூர்வ சகோதரர்கள்

அமெரிக்காவில் பறந்த அபூர்வ சகோதரர்கள்

சி. ஜெயபாரதன், கனடா.


பறவையைக் கண்டான்! மனிதன் பறந்திட முயன்றான்!


மனிதன் தோன்றிய காலம் முதல் பறவைகளைப் போல் தானும் வானில் பறக்க வேண்டும் என்று பல்லாயிரம் ஆண்டுகளாகக் கனவு கண்டு, காவியங்கள் எழுதி, காற்றில் பறக்கவும் முயன்றிருக்கிறான். புராண இதிகாசக் காவியங்களில் புஷ்பக விமானங்கள் இருந்ததாக நாம் படித்திருக்கிறோம்! விஞ்ஞானக் கதைகள் எழுதிய பல எழுத்தாளர்கள், ஃபிரான்ஸிஸ் காட்வின் [1562-1633], சாமுவெல் பிரன்ட் [1727], ஜூல்ஸ் வெர்ன் [1828-1905] போன்றோர் அண்ட வெளிப் பயணங்களை யும், வான ஊர்திகளைப் பற்றியும் எழுதிப் பறப்பியல் சிந்தனையைத் தூண்டி விட்டிருக்கிறார்கள்! இத்தாலிய ஓவியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி [1452-1519] தன் குறிப்புத் தாள்களில் பறவையைப் போன்று 'இறக்கை இயக்கும் ஊர்திகளை ' [Ornithopters] டிசைன் செய்து படத்தில் வரைந்து காட்டி யிருக்கிறார். அந்த ஊர்தியில் விளக்கமுடன், தோளில் இணைத்த சிறகுகள், நுழைக் கதவுகள், உள்ளடங்கி [Retractable], அதிர்வை விழுங்கிக் [Shock-absorbing], கீழுருளும் கால்கள் [Landing Legs] அமைக்கப் பட்டிருந்தன! ஆனால் டவின்ஸியின் விமானம் வரை படத்திலிருந்து வடிவக அமைப்பில் வரவில்லை! முதன் முதலில் மனிதனைத் தரைக்கு மேலே தூக்கி வானில் பறந்தது, 1783 இல் டிரோஷியர் [DeROZIER] படைத்த, காற்றை விடக் கன மில்லாத, 'தீவாயு பலூன் ' [Fire-Balloon]! ஆனால் பலூன்கள் யாவும் காற்றின் தயவில் பறப்பதால், அவற்றைக் கட்டுப் படுத்துவது கடினமாய்ப் போனது! 1893 இல் ஜெர்மன் நிபுணர், ஆட்டோ லிலியென்தால் [Otto Lilienthal] பறவையைப் போல், தன்னுடன் மாபெரும் இறக்கைகளை மாட்டிக் கொண்டு, ஒரு குன்றுச் சரிவில் ஓடிச் சிறிது தூரந்தான் பறக்க முடிந்தது! ஆனால் பாவம் 1896 ஆண்டு சோதனையின் போது, ஊர்தி கீழே விழுந்து தரையில் உடைந்து, அவர் மாண்டு போனார்!



லியனார்டோ டவின்ஸி மற்றும் பின்பு முயன்றவர் யாவரும், 'வானில் தாவிப் பறப்பதற்குரிய தசைச் சக்தி மனிதனுக்கு உண்டு ', என்னும் தவறான ஓர் அடிப்படைக் கொள்கையைக் கொண்டிருந்தனர்! மெய்யாக அந்தச் சக்தியைக் கடவுள் மனிதனுக்கு அளிக்கவில்லை! அடுத்த அடிப்படைத் தவறு: 'பறவைகள் தம் இறக்கைகளை கீழ்நோக்கியும், பின்னோக்கியும் அடித்து, காற்றில் உந்தி நீடித்துப் பறக்கின்றன '. அதாவது, மனிதன் நீரில் நீந்திடும் போது, கை கால்களை முன்னும் பின்னும் நகர்த்தி உந்துவது போல், பறவைகளும் இறக்கை களால் செய்கின்றன! இதுவும் தவறானதே! கீழ் நோக்கி அடிக்கையில், ஒரு பறவை தன் இறக்கைகளைப் பின்னோக்கி அடிக்க இயலாது. அப்படியெனில் பறக்கும் போது, ஒரு பறவையின் இறக்கைகளில் என்னதான் நிகழ்கிறது ? பெரும் பான்மையான பறவை இனங்களுக்கு, இறக்கையின் ஓரத்தில் ஐந்தாறு சிறப்புச் சிறகுகள் உள்ளன. கீழ் நோக்கி இறக்கை அடிக்கும் போது, இந்தச் சிறப்புச் சிறகுகள், 'சுழற் தட்டுகள் ' [Propeller Blades] போன்று சக்தியோடு சுழற்றிப், பறவை யானது முன்னோக்கி உந்திப் பாய்கிறது. அதிவேகக் காமிராக்கள் எடுத்த சோதனைப் படங்களில், பறவையின் இறக்கைகள் கீழடிக்கும் போது அவற்றின் நுனிச் சிறகுகள் சுழற்றுவதையும், இறக்கைகள் முன்னோக்கி வளைவதையும் காண முடிகிறது. ஆதலால் மனிதன் பறக்க வேண்டு மென்றால், இதுவரை பயன் படுத்திய இறக்கைகளை ஒதுக்கி விட்டு, வேறு புது முறைகளைக் கையாள வேண்டும்!



பறக்கும் யுகத்தின் நுழைவாயிலை முற்றிலும் திறந்தார்கள்


பறக்கும் வாகனமாக, மனிதன் இதுவரைக் கையாண்டவை, வாயு பலூன், வாயுக்கப்பல் [Airship], பொறி யில்லா ஊர்தி [Glider], எஞ்சினுள்ள விமானம் [Powered Aircraft], ஏவு கணை [Rocket] போன்றவை! ஆனால் 1903 டிசம்பர் 17 ஆம் நாள் முதன் முதல் வெற்றிகரமாய் ஊர்தியை எஞ்சின் பொறியால் இயக்கி, பறப்பியல் உந்தலைக் கட்டுப் படுத்தி, நீடித்துப் பறந்த [Powered, controlled & Sustained Flight] படைப்பு மேதைகள், அமெரிக்காவின் சரித்திரப் புகழ் பெற்ற அபூர்வ சகோதரர்கள், வில்பர் ரைட் & ஆர்வில் ரைட் [Wilbur Wright & Orville Wright]. கல்லூரிக் கல்வியோ, பட்டப் படிப்போ எதுவும் இல்லாமல், வெறும் உயர்நிலைப் பள்ளிப் படிப்போடு, சைக்கிள் மெக்கானிக்காகப் பணியாற்றி, விமானத் துறையில் பேரார்வம் காட்டி, அவர்கள் இருவரும் வெற்றி பெற்றது விந்தையிலும் விந்தையே! இத்தாலியில் தி லானா [De Lana 1670], பிரான்ஸில் மாண்ட் கால்பியர், பிளான்சார்டு [Josepf & Etienne Montgolfier, Blanchard 1783-1785], பிரிட்டனில் கேய்லி [George Cayley 1804-1852], பிரான்ஸில் வெர்ன், கோடார்டு [Jule Verne & Godard 1828-1905], சாமுவெல் ஹென்சன் [Samuel Henson 1842], பிரான்ஸில் ஜல்லியன், து டெம்பிள் [Pierre Jullien 1850, Felix Du Temple 1857-1874], அமெரிக்காவில் லாங்கிலி [Dr. Samuel Langley 1896-1903], பிரேஸிலில் துமாண்ட் [Alberto Dumont 1898], ஜெர்மனியில் லிலியென்தால் [Otto Lilienthal 1868-1896], பிரென்ச் அமெரிக்கன் சனூட் [Octave Chanute 1896-1901] போன்ற பறப்பியல் விஞ்ஞானத்தின் முன்னோடி மேதைகளாக இருந்தாலும், 1905 இல் உலகிலே முதன் முதல் செயல்முறை விமானத்தை [Practical Plane] உருவாக்கி அதில் பறந்து காட்டியவர்கள் ரைட் சகோதரர்களே! இருபதாம் நூற்றாண்டில், பறக்கும் யுகத்தின் நுழைவாயிற் கதவை முற்றிலும் திறந்து வைத்தவர்கள், ரைட் சகோதரர்களே!


ரைட் சகோதரர்களின் பிறப்பும், வளர்ப்பும், விருப்பும்.


வில்பர் ரைட் மில்வில் [Millville], இண்டியானாவில் 1867 ஏப்ரல் 16 ஆம் தேதி யிலும், ஆர்வில் ரைட் டேடன், ஒஹையோவில் 1871 ஆகஸ்டு 19 ஆம் தேதியிலும், கிறிஸ்துவப் பாதிரியார் மில்டன் ரைட், தாய் சூசன் ரைட் இருவருக்கும் பிறந்தவர் கள். சாதாரணப் பொதுப் பள்ளிக்கூடத்தில்தான் இருவரும் படித்தவர்கள். இரு வரும் ஏனோ கல்லூரிப் படிப்புக்கு அனுப்பப் படவில்லை! சிறு வயதில் அவர்கள் அறிவாற்றல் துறைகளில் தொடரவும், ஒன்றில் ஆர்வம் எழுந்தால், அதை ஆராயும் படிப் பெற்றோர் ஊக்க மூட்டினர். சுயமாய்த் தனித்துச் சிந்தனை புரிவது, ஒரு கொள்கையைப் பின்பற்றிச் செயல்படுவது, போன்ற நற்குணங்கள் இவர்கள் தந்தையிடம் கற்றவை.


தந்தையிடம் கற்றதை விடத் தாயிடம், இருவரும் அறிந்து கொண்டது அதிகம். தாய் கல்லூரிக்குச் சென்று அல்ஜீப்ரா, ஜியாமிதி கற்றுக் கொண்டவள். பையன் களுக்குப் 'பனிச் சறுக்கி ' [Sled] எப்படி டிசைன் செய்வது என்று சொல்லிக் கொடுத்து, படத்தைத் தாளில் வரைய வைத்து, இருவரையும் பலகையில் செய்யக் கற்றுக் கொடுத்தவள் தாய். 'முதலில் தாளில் துள்ளியமாக வரைந்தால், பின்னல் அதைச் செய்யும் போது, முறையாக அமைக்கலாம் ' என்று சிறு வயதிலேயே சிறந்த செய்முறை வழியைப் புகட்டியவள் தாய்! அதைப் பின்பற்றி இருவர் அமர்ந்து செல்லும் பனிச் சறுக்கி ஒன்றைப் பலகையில் செய்து, போட்டியில் கலந்து கொண்டு முதலாவதாகப் பனியில் சறுக்கி வெற்றியும் அடைந்தனர்.


ஒரு சமயம் தாயுடனும் தம்பியடனும் டேடன் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற போது, பறவை ஒன்று வானி லிருந்து நீரில் பாய்ந்து, ஒரு மீனோடு மீண்டதைக் கண்டு, பதினொரு வயதுச் சிறுவன் வில்பர் பேராச்சிரியம் அடைந்தான். 'பறவை எப்படிப் பறக்க முடிகிறது, அம்மா ? ' என்று வில்பர் கூர்மையாகக் கேட்டான்! 'இறக்கை களால் பறக்கிறது ' என்று கூறினாள் தாய். வில்பருக்குத் தாயின் பதில் திருப்தி அளிக்க வில்லை. 'எப்படி அம்மா ? பறவை நீரில் பாயும் போதும், மீனோடு மேல் எழும் போதும், அதன் இறக்கைகள் அசையவே இல்லை அம்மா! ' என்று தாயைக் குறுக்குக் கேள்வியில் மடக்கினான் வில்பர். தாயால் அவனுக்கு விளக்கம் தர முடியவில்லை. 'நமக்கும் இறக்கைகள் இருந்தால் நாமும் பறக்கலாம், இல்லையா அம்மா ? ' என்றான் வில்பர். 'கடவுள் நமக்கு இறக்கைகள் அளிக்க வில்லை ' என்றாள் தாய். 'இறக்கைகளை நாமே தாயாரித்து மாட்டிக் கொள்ளலாம், அம்மா ' என்று தர்க்கத்தைப் பூர்த்தி செய்தான், வில்பர்!


தம் யூகிப்பில், திறமையில் ஆழ்ந்த நம்பிக்கையும், தீர்மான மான முடிவில் தளராத உறுதியும் கொண்டவர்கள்! ஏமாற்றம், ஏலாமை, இல்லாமை எதுவும் மனதைக் கலைக்காத விடாமுயற்சி! இரு பையன்களும் சிறு வயதிலிருந்தே பொறி நுணுக்க அறிவும், ஒப்பில்லாத யந்திரச் செய்திறமையும் கொண்டிருந்தார்கள்.


தாமே படித்து அறிந்த ஞானத்துடன் முதலில் அச்சு யந்திரங்களைப் [Printing Machines] புதிதாய் டிசைன் பண்ணி, உற்பத்தி செய்தார்கள். அடுத்து சைக்கிள் வண்டிகளை டிசைனும் உற்பத்தியும் செய்து விற்றார்கள். இந்த வர்த்தகங்களில் சேர்த்த பணத்தொகையே பின்னால் அவர்கள் விமானத் துறை ஆராய்ச்சிகளுக்கு மிகவும் உதவின. 1896 இல் ஆக்டேவ் சனூட்ஸ் [Octave Chanutes] எழுதிய 'பறக்கும் யந்திரங்களின் வளர்ச்சி ' [Progress in Flying Machines] வெளியீடு களை, ஆழ்ந்து படித்து அறிந்ததுதான், அவர்களது அடிப்படையான ஆரம்பப் பாடம். அறுபது வயதான பிரென்ச் அமெரிக்கன், சனூட்ஸ் தன் சகாகக்களுடன் சிகாகோவுக்கு அருகில் மிச்சிகன் ஏரியின் மணற் பாங்கான தளத்தில், ஐந்து விதப் 'பொறியிலா ஊர்திகளை ' [Gliders] ஆயிரம் முறைக்கு மேல் பறக்க விட்டு முயன்றிருப்பவர். 1900 இல் ரைட் சகோதரர்கள் டேடனில் தம் ஊர்திச் சோதனை களை ஆரம்பித்த போது, சனூட்ஸ் அவரது ஆழ்ந்த தோழனாகி, அடிக்கடி கடிதம் எழுதித் தொடர்பு கொண்டிருந்தார்.


விமானத்தில் முதல் முப்புற அச்சு முறைக் கட்டுப்பாடு


ரைட் சகோதரர்கள் விமானத் துறையில் அடி வைத்த காலம், அவர்கள் முன்னேறத் தகுந்த தருணமாக இருந்தது. 1896 இல் தான் ஹென்ரி ஃபோர்டு [1863-1947] தனது முதல் மோட்டார் காரைச் செய்தார். அப்போதுதான் டாசல் எஞ்சின், பெட்ரோல் எஞ்சின் புதிதாகத் தோன்றி வளர்ச்சி பெற்ற காலம். விமான நகர்ச்சி [Aerodynamics], கட்டமைப்புப் பொறித்துறை [Structural Engineering] ஆகிய பொறியியல் ஆக்க நுட்பங்கள் விருத்தியான காலம். இவற்றை எல்லாம் ஒன்றாய் இணைத்து வானத்தில் விமானத்தைப் பறக்க விடுவது, ரைட் சகோதரருக்கு ஓர் அரிய பெரிய வாய்ப்பாக அமைந்தது!



ஜெர்மன் நிபுணர், ஆட்டோ லிலியென்தால் 'பொறியிலா ஊர்தியில் ' [Glider] 1891 இல் வெற்றிகரமாய்ச் செய்த பல சோதனைகளை ஆழ்ந்து படித்த, வில்பர்தான் முதலில் பறக்கும் யந்திரத்தில் மோக முற்றார். 1896 இல் லிலியென்தால் தனது சோதனையின் போது, ஊர்தி கீழே விழுந்து மரணம் அடைந்தார். 1899 ஆண்டு ஒரு சமயம், வில்பர் கழுகு பறப்பதை ஆழ்ந்து ஆராய்ந்த பின், விமானம் விழாமல் சீராய்ப் பறந்து செல்ல, 'மூன்று அச்சு முறையில் ' [Three Axes] இயங்கும் பொறியமைப்பு இருக்க வேண்டும், எனக் கண்டு பிடித்தார். அதாவது, 'முன் நகர்ச்சி ' [Thrust], 'மேல் எழுச்சி ' [Lift], 'திசை திருப்பி ' [Turning Left or Right] ஆகிய 'முப்புறக் கட்டுப்பாடு ' என்ற புதிய பறப்பியல் நியதியைச் சிந்தித்து உருவாக்கினார். பறவையைப் போன்று, பறக்கும் யந்திரம் பக்க வாட்டில் மிதக்க முடிய வேண்டும்! மேலே உந்தி ஏறிச் செல்லவோ, கீழே இறங்கி நிற்கவோ இயல வேண்டும். இடப் புறமோ, வலப் புறமோ திரும்ப முடிதல் வேண்டும். தேவைப் பட்டால், இவற்றில் இரண்டு அல்லது மூன்று வித இயக்கங்களையும் ஒரே சமயத்தில் நிகழ்த்த வசதிகள் இருக்க வேண்டும். முன்னகர்ச்சிக்கு வலுவான பளுவற்ற எஞ்சின் தேவைப் பட்டது. எழுச்சி அளிப்பதற்கு 'தூக்கிகள் ' [Elevators] வேண்டி யிருந்தன. பக்க வாட்டில் திருப்ப 'திருப்பி ' [Rudder] வால்புறம் மாட்டப் பட்டது.


விமான இயக்கத்தில் ரைட் சகோதரருக்குப் 'பறப்பியல் கட்டுப்பாடு ' [Flight Control] மிகப் பிரதானம் என்று தோன்றியது. கழுகு, பருந்துகள் உருளும் போது இறக்கைகள் சுழல்வதைக் கண்டார்கள். 1899 இல் முதன் முதல் அவர்கள் சோதனை செய்த 'இரு தளப் பட்டத்தில் ' [Bi-Plane Kite] சுழலும் இறக்கைகளை பிணைத்திருந்தார்கள். அவ்வாறு இறக்கைகளில் அமைத்ததால் விமானம் திரும்பிடும் போது, ஒருபுறம் எழுச்சி உயர்ந்தும், மறுபுறம் எழுச்சி இணையாகத் தாழ்ந்தும், காற்றை எதிர்த்துச் சீராகத் திரும்ப முடிந்தது. எஞ்சின் பொருத்திய முதல் விமானத்தை இயக்கியதோடு, 'முப்புற அச்சுக் கட்டுப்பாடுப் ' பொறியமைப் பைக் கண்டு பிடித்து வெற்றி கரமாய்ப் பயன்படுத்திப் 'பறப்பு யந்திரவியலைச் ' [Aerodynamics] செப்பனிட்டுச் சிறப்பித்த பெருமை ரைட் சகோதரர்கள் இருவர் களுக்கு மட்டுமே சாரும்.


எஞ்சின் இயக்கும் விமானத்தைச் சோதிப்பதற்கு முன், 1900 முதல் 1902 வரை மூன்று ஆண்டுகள், கிட்டி ஹாக், வட கரொலினாவில் [Kitty Hawk, North Carolina] பொறி இல்லாத மூன்று ஊர்திகளைச் [Gliders] காற்று எப்போதும் அடித்துக் கொண்டிருக்கும் 'கில் டெவில் ஹில் ' [Kill Devil Hill] என்னும் இடத்தில் ஆராய்ச்சி செய்தார்கள்! டேடன் ஓஹையோவில் முதன் முதல் 'புயல் குகை ' [Wind Tunnel] ஒன்றை நிறுவி, 200 விதமான இறக்கைகளைப் பல மாதங்கள் இருவரும் ஆராய்ச்சி செய்து, கடேசியில் தகுதியான ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள். மூன்றாவது படைக்கப் பட்ட ஊர்திதான் முழுக் கட்டுப்பாடு உடையது. மேலும் கீழும் எழுச்சி [Lift] உண்டாக்கும் 'தூக்கி ' [Elevator] ஊர்தியின் முன்புறமும், இடது-வலது பக்கம் திரும்ப 'திருப்பி ' [Rudder] பின்புறமும், ஊர்தி உருள்வதற்கு 'இறக்கைச் சுழற்றி ' [Wing Wrapper] இரு புறமும் அதற்கு அமைக்கப் பட்டிருந்தன!


இரண்டு சிரமமான பிரச்சனைகள்: திறம் மிக்க, பளுவற்ற அப்போது இல்லாத 'சுழலாடிகள் ' [Propellers] முதலாவது, டிசைன் செய்யப் பட்டு அமைக்கப் படவேண்டும். இரண்டாவது தகுதியான எடை சிறுத்த, எஞ்சின் ஒன்று தயாரிக்கப் படவேண்டும். அந்தக் காலத்தில் படைக்கப் பட்ட எஞ்சின்கள் யாவும் மிகக் கனமாக விமானத்தில் இணைக்கத் தகுதி யற்றவையாய் இருந்தன!


1903 இல் 12 H.P. பெட்ரோல் எஞ்சின் கொண்ட 'கிட்டி ஹாக் ' [Kitty Hawk] என்னும் Flyer I டிசம்பர் 17 ஆம் தேதி பூமிக்கு மேல் முதலில் 12 வினாடிகள், கடைசியில் 30 mph வேகத்தில், 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்தது! விமானத்தின் எடை 750 பவுண்டு. இறக்கையின் நீளம் 40 அடி 4 அங்குலம். சரித்திரப் புகழ் பெற்ற இந்தப் பயணத்தைச் செய்த முதல் வீரர், ஆர்வில் ரைட். பிறகு மற்றும் இரண்டு ஆண்டுகள் செம்மைப் படுத்தப் பட்டு, சிறப்பிக்கப் பட்டு, 1905 இல் உலகின் முதல் பறக்கும் விமானம், Flyer III உருவானது. அது வானில் 38 நிமிடங்கள் நேரம் பறந்து, 24 மைல் கடந்தது; சிரமம் இன்றி எட்டாம் எண்போல் வட்ட மிட்டது! பக்க வாட்டில் திரும்பியது! 1908 இல் ஐந்து மாதங்களில் வில்பர் மட்டும், 100 தடவைக்கும் மேல் 25 மணி நேரங்கள் பறந்து காட்டி யிருக்கிறார். தொடந்து நீண்ட நேரம் பயணம் செய்தது, 2 மணி 20 நிமிடங்கள். பயணம் தடைப் பட்டதற்குப் பெரும் பான்மையான காரணம், எஞ்சினில் பெட்ரோல் தீர்ந்து போனதுதான்! எஞ்சினும் சிறியது! பெட்ரோல் கலனும் சிறியது!


1909 இல் அமெரிக்கா செப்பனிடப்பட்டு சீர் செய்யப் பட்ட முதல் யுத்த விமானத்தை ரைட் சகோதரர் உதவியில் தயார் செய்து உலகிலே முதன்மையானது!


விண்வெளியில் ஏறி வெண்ணிலவில் கால்வைத்தார்.


1912 மே மாதம் 30 ஆம் தேதி வில்பர் டைஃபாய்ட் காய்ச்சலில் உயிர் துறந்து, ஆர்வில் தனித்து விடப் பட்டார். அடுத்து 35 ஆண்டுகள் விமானச் செம்மைப் பாட்டில் ஆழ்ந்து பங்கெடுத்து ஆர்வில் 1948 ஜனவரி 30 ஆம் தேதி காலமானார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்நாள் முழுதும் விமானத்துறைப் படைப்புக்கே தங்களை அர்ப்பணித்த பிரம்மச்சாரிகள். பூமியில் சாதாரண சைக்கிள் மெக்கானிக்களாக ஆரம்பித்து, வானில் மிரக்கிள் மெக்கானிக்களாக மேலுயர்ந்த அமெரிக்காவின் அபூர்வ சகோதரர்களின் அபாரத் திறமையை என்ன வென்று வியப்பது ? 1903 இல் அபூர்வ சகோதரர்கள் 12 வினாடி காலம் 120 அடி பயணம் செய்து பறப்பியல் அடிப்படையாகி, அண்ட வெளியில் நீல் ஆர்ம்ஸ்டாங் ஏவுகணைச் சிமிழில் 250,000 மைல் பறந்து, வெண்ணிலவில் முதன் முதல் 1969 இல் கால் வைக்க உதவியதைச், சரித்திரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பறை சாற்றிக் கொண்டே இருக்கும்!


thanks to thinnai.com
**************************

கருத்துகள் இல்லை: