ஞாயிறு, நவம்பர் 07, 2010

விஞ்ஞானமும் மெய்ஞானமும்


விஞ்ஞானம் என்பது காலம் காலமாக இந்த பூமியில் உள்ளதை கண்டுபிடித்துக் சொல்வது, விஞ்ஞானிகள் எதையும் உண்டாக்கவில்லை உள்ளதை கண்டுபிடித்துக் சொல்வதற்கே, நம் அறிவை எண்ணி நம்மை நாமே மெச்சிக் கொள்கிறோம், இவற்றையெல்லாம் உண்டாக்கி வைத்திருப்பவனின் பெருமையை, அறிவை சொல்வதே மெய்ஞானம்.

விஞ்ஞானம் என்பது மெய்ஞானத்தின் முன் மைக்ராஸ்கோப்பில் பார்க்கவேண்டிய பொருள், விஞ்ஞானத்தை கொண்டாடும் நாம் அதன் மூலம் கண்டுபிடித்தவற்றைப் படைத்தவனின் அறிவு பற்றி சிந்திப்பதில்லை அதைச் சொல்வது தான் மெய்ஞானம்.

இந்த பிரபஞ்சமே அந்த பிரம்மத்தின் அறிவு தான், உதாரணமாக நாம் இதைத் சொல்லலாம் ஒரு ஓவியன் வரைந்த ஓவியம் அது வரையப் படும் முன் எங்கிருந்தது? ஒரு கற்பனையாக அவன் அறிவில் இருந்தது, அதே போல் தான் இந்த பிரபஞ்சமும் அந்த பிரம்மனின் அறிவு.

தாமஸ் ஆல்வா கண்டுபிடித்த மின்சாரம் ஆண்டாண்டு காலமாய் இங்கு தான் இருந்தது, ஆல்பர் ஐன்ஸ்டின் சொன்ன, சக்தியில் இருந்து பொருளும் பொருளில் இருந்த சக்தியும் ஆண்டாண்டு காலமாய் இந்த பிரபஞ்சத்தின் இயல்பாய் நடந்து கொண்டிருந்து, டாலமி சொன்ன, வட்டப் பாதையில் கோள்கள் சுற்றி வருகின்றன என்பதும் நடந்து கொண்டுதானிருந்து, ஐசக் நியுட்டனின் புவி ஈர்ப்பு விசை கொள்கை அதில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருந்து, ஆனால் நமக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவற்றை எல்லாம் கண்டுபிடிக்க நமக்கு நூற்றண்டுகளை கடக்க வேண்டியிருந்து.

இன்றய எலக்ட்ரானிக்ஸ் யுகம் சொல்கிற எங்கோ நடப்பதை இங்கே பார்க்க முடியும் என்பதையும், உலகின் ஒரு மூலையில் பேசுவதை மறு மூலையில் கேட்க முடியும் என்பதையும் நம்ப நமக்கு இத்தனை நூற்றண்டுகளாயிற்று, இன்றய கண்டுபிடிப்புகளும் இனி வரும் கண்டுபிடிப்புகளும், இடமும் காலமும் என்று உண்டாயினவோ அன்றே உண்டாகிவிட்டது அதை உணர நம் அறிவு வளர இத்தனை காலங்களாயிற்று.

இவற்றையெல்லாம் படைத்து அதை உணர நமக்கு வேண்டிய அறிவையும் கொடுத்த அந்த பரம் பொருளை அது கொடுத்த சொற்ப அறிவை கொண்டு அறிய முற்படுவது விஞ்ஞானம். மெய்யறிந்து, மெய்யழிந்து, மெய்யில் மெய்யாகி உதிர்த்த மெய்யான வார்த்தைகளே மெய்ஞானம்;;.

விஞ்ஞானம் இன்று உபகரணங்களுடன் செய்து காட்டியதை, அன்றே உபகரணங்களின்றி செய்துகாட்டியது மெய்ஞானம், சிற்றறிவை அழித்து பேரரறிவில் ஐக்கியமாகி அறியப்பட்ட உண்மைகள் அவை.

இன்று சிற்றறிவைக் கொண்டு பேரரறிவை அளக்க முற்படுவது விஞ்ஞானம், இன்றும் விஞ்ஞானத்தால் விளங்க முடியா, விளக்க முடியா நிகழ்வுகள் பல உண்டு. விஞ்ஞானத்தை மெய்ஞானத்திற்கு எதிராக பயன்படுத்தாமல் மெய்ஞானத்துடன் விஞ்ஞானத்தையம் கலந்து அறிய முற்ப்பட்டால் வரும் காலங்களில் பல அறிய நிகழ்வுகள் நிகழலாம். அதுவரை மனிதன் தன் சொற்ப அறிவால் தன்னைத்தானே சூறையாடமல் இருக்க வேண்டும்.

இந்த நூற்றண்டின் மிக சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட ஐன்ஸ்டின் கூட, நான் எதையும் கண்டுபிடிக்கவில்லை எனக்குள் தோன்றியது என்று கூறியிருக்கிறார். அந்த தோன்றலைக் கூறுவது தான் மெய்ஞானம்.




திங்கள், அக்டோபர் 18, 2010

பிறவிப் பயன்




மனிதப் படைப்பு

உலகில் கோடானு கோடி ஜிவராசிகள் பிறக்கின்றன மரிக்கின்றன, அவைகள் தோன்றுவதும் மரிப்பதும் தானே அறியா ஒரு இயல்பு சுழற்சியாக இந்த உயிரின தோற்ற மறைவு பிரபஞ்சத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. மனிதன் என்ற ஒரு அற்புதப் படைப்பு எல்லா உயிரினங்களிலிருந்தும் வேறுபடுகிறது.

காடு, மலை, கிரகம் முதல் விண்ணில் மண்ணில் உள்ள அனைத்து உயிரிகளும் தோன்றுவதற்கு முன் எதுவாக இருந்ததோ அதுவாகவே தோன்றிய பின்னும் இருக்கிறது. அதன் உருவங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாம் ஆனால் அவற்றில் தனக்கென்று ‘சுயம்’ எதுவும் இருப்பதில்லை, உருவங்கள் வேறு வேறாக இருந்தாலும் அதன் உள்ளமை ஒன்றாகத்தான் இருக்கிறது மனிதன் உட்பட, ஆனால் மனிதனுக்கு தோற்றுவிக்கப் பட்ட ‘தான்’ என்ற மாய உணர்வு தன்னை தனியானவனாக உணரவைக்கிறது.

உண்மை நிலை

தன்னை மூலத்திலிருந்த பிரித்து உணர்வதே ‘தான்’ என்பது இதனையே அகங்காரம் என்கிறோம். இந்தப பிரபஞ்சத்தில் மனிதனையும், ஜின்னையும் தவிர வேறு எந்த படைப்பும் தன்னை பிரித்து உணர்வதில்லை. அதனால் மற்ற உயிரினங்கள் இறப்பைப் பற்றிய பயம், கவலைக் கொள்வதில்லை, எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பி செல்கிறது. அவைகள் எங்கிருந்து வந்தோம் என்பதையும் அறிவதில்லை எங்கே போகிறோம் என்பதையும் அறிவதில்லை. ஆனால் ‘தான்’ என்ற உணர்வில் வாழும் மனிதனுக்கு மட்டும் தான் மரண பயம், இறைவன் தன் வேதமான திருமறையில் கூறுகிறான் ‘என்னிலிருந்தே வெளியானிர்கள் என்னிடமே மீளுவிர்கள்’ இதை மனித மனம் ஏற்றுக் கொள்வதில்லை நாம் இங்கேயே இப்படியே இருந்து விட வேண்டும் என்று விரும்புகிறோம், இங்கே தான் நாம் இருப்போம், ஆனால் இந்த உருவத்திலேயே நிலைத்திருக்க விரும்புகிறோம்.

நாம் இந்த உருவத்தைக் கொண்டாடுகிறோம் வேறு யாருடையதும் அல்ல நம் உருவத்தையே நாம் கொண்டாடுகிறோம் இதுவே இத்தன கஷ்டத்திற்கும் காரணம். மரணம் என்பது இல்லாமல் போவது அல்ல, அது ஒரு நிலை மாற்றமே, பஞ்ச பூதங்களின் கூட்டாக இருந்த நாம் மீண்டும் பஞ்ச பூதங்களாகிவிடுவோம், இந்த பிரபஞ்சத்தில் எதுவும் கூடுவதும் இல்லை குறைவதும் இல்லை, எதுவும் நிரந்தரமும் அல்ல, மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

நோக்கம்

இதையெல்லாம் ஆய்ந்து உணரும் சக்தி மனிதனுக்கு மட்டும் படைக்கப் பட்டிருக்கிறது, இதற்காகவே தன்னைப் பிரித்துணரும் அந்த அகங்காரமும் படைக்கப் பட்டது. ஆனால் இயல்பு நிலை என்னவென்றால், பிறக்கிறோம்,வளர்கிறோம், பொருளீட்டுகிறோம், சந்ததி உண்டாக்குகிறோம், எத்தனை கஷ்டம் இந்த உலகில் பட்டாலும் சந்தோசமாக வாழ்வதாக நம்மை நாம் நம்பிக்கொள்கிறோம், வாழ்ந்தது போதும் என்று வாழ்வின் எந்தக் கட்டத்திலும் எண்ணுவதில்லை.
சரி மற்ற ஜீவராசிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவை அலங்காரத்திற்கு படைக்கப் பட்டவை, ஆனால் மனிதனின் தோற்றத்தின் அர்த்தம்? ஏன் பிறந்தோம்? நம் பிறப்பின் நோக்கம் என்ன? என்பதை சிந்திக்கத் தான் மனிதனுக்கு ஆறாம் அறிவு. ஆனால் இந்த ஆறாம் அறிவை கடவுள் சண்டையில் தொலைத்துவிட்டு மொழியும் மிருகங்களாகிவிட்டோம், தன்னை அறிந்தவனே தன் கடவுளையும் அறிந்தான் அதுவே பிறவி எடுத்ததன் நோக்கம்.

செவ்வாய், அக்டோபர் 05, 2010

வழுக்கல்கள்


வெளிச்சத்திலும்
இருண்டு கிடக்கும்
மனங்கள்
விளக்கை காணமலே
மாண்டு விடும்
விட்டில்கள்

இறக்கவே மாட்டோம்
என்பது போல்
வாழும் மனிதர்கள்
வாழவே இல்லை
என்பது போல்
இறக்கும் மனிதர்கள்

ஆசை எனும்
ஈரமான தலையில்
தேவை என்ற
பாரமான சுமைகளுடன்
சுகமாய் வாழ்வதாய்
நமக்குள் ஒரு
சொப்பனம்

விடிந்த பிறகும்
திறக்க மறுக்கும்
இமைகள்
அறிந்த பிறகும்
உணர மறுக்கும்
மனங்கள்.

இப்படி
வாழ்கை எனும்
பாதையில்
வழிநெடுக
வழுக்கல்கள்.

ஞாயிறு, அக்டோபர் 03, 2010

அமெரிக்காவின் (U.S.A) பொருளாதார வீழ்ச்சியும் சரியும் செல்வாக்கும்


அமெரிக்காவின்(U.S.A) பொருளாதார வீழ்ச்சியும் சரியும் செல்வாக்கும்

யு.எஸ்.எ பொருளாதார வீழிச்சியை மட்டும் சந்திக்கவில்லை அதன் அரசியல்,தொழில் புள்ளியல் படி அது கடந்த பத்தாண்டுகளாக தன் ஆதிக்கத்தை இழந்து வருகிறது என்பது கண்கூடான உண்மை.

பிரேசில் அமெரிக்க கண்டத்தில் உள்ள வளர்ந்து வரும் நாடு, தற்போதைய கணிப்பின் படி நான்கு நாடுகள் (BRIC – Bracis,Russia,India,China) இவற்றின் கூட்டனியில் பிரேசில் முன்னனியில் இருக்கிறது. 2032 ல் அதன் பொருளாதாரம் நம்பர் ஒன்னாக இருக்கும்.

MARVINS (Mexico,Australia,vietnam,Indonesia,Nigeria and South Africa) எனறழைக்கப் படும் ஐந்த நாடுகள் கூட்டனியில் மெக்ஸிக்கோ அரசியல் சக்தியிலும் பொருளாதாரத்திலும் முன்னனியில் இருக்கிறது. கனடாவும் வெனிசூலாவும் எணணெய் வளத்தில் ஒரு நீண்ட எதிர்காலத்தைக் கொண்டிருக்கின்றன.

பெருவும், ச்சிலியும் தாதுவளத்தில் தன்னை முன்னிருத்திக் கொள்கின்றன, இந்த நாடுகள் யாவும் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியின் போது தன்னை மேம்படுத்திக் கொள்கின்றன. இந்த அறிகுறிகள் யாவும் அமெரிக்கா தன் பொருளாதாரத்திலும் செல்வாக்கிலும் பின் தங்கிக் கொண்டுவருகின்றன என்பதைக் காட்டுகிறது.

ஈரான் விசயத்தில் அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்து விட்டது பிரேசில், ஹிலாரி கிளிண்டன் நேரிடையாக சென்று கூறியும், அமெரிக்காவிற்கு சாதகமாக ஈரானுக்கு எதிராக தடைவிதிக்க கூடாது என்று கூறிவிட்டது, ஹிலாரி வெறுங்கையுடன் தான் திரும்பினார். பிரேசில் ஈரானுடனும் அமெரிக்காயுடனும் நட்புறவாக இருக்க விரும்புவாதாக கூறிவிட்டது.

இன்று உலகின் நம்பர் ஒன் பணக்காரர் மெக்ஸிக்கோ நாட்டுக்காரர், அமெரிக்கன் அல்ல, கடந்த பதினாறு வருடங்களில் முதன் முறையாக ஒரு அமெரிக்கர் உலகப் பணக்காரர் இல்லை, மெக்ஸிக்கோ நாட்டுக் காரரான கார்லோஸ் ஸ்லிம் என்பவருக்கு போய்விட்டது. அவரின் சொத்து மதிப்பு 54 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

மூன்று வருடப் பொருளாதார வீழ்ச்சிக்கு பின் லத்தின் அமெரிக்க வேகமாக அதிலிருந்து மீண்டு வருகிறது. அமெரிக்காவின் முன்னேற்றம் ஆமை வேகந்தான், பல ஆயிரம் பேர் வேலையிழப்பும், பல தொழிற்ச்சாலைகள் மூடவேண்டிய கட்டாயமும் அமெரிக்கவில் ஏற்ப்பட்டுள்ளது.

1930களில் பொருளாதார விழ்ச்சி ஏற்பட்ட பொழுது மிகவும் பாதிக்கப் பட்டது ச்சிலி, பெரு, பொலிவியா ஆனால் தற்போது நிலைமையே வேறு, புள்ளியியல் படி மெக்ஸிக்கோ, பிரேசில், அர்ஜென்டைனா ஆகிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரம் இன்னும் பலகீனமாகவே இருக்கிறது இதே நிலை நீடிக்குமானால் லத்தீன் அமெரிக்காவின் ஏற்றுமதி வேறு நாடுகளுக்கு மாறும்.

ச்சிலி அமெரிக்காவை விட 300 சதம் அதிகமாக தாமிரம் உற்பத்தி செய்கிறது, முன்பு தாமிர உற்பத்தியில் நம்பர் ஒன்னாக இருந்தது அமெரிக்கா, இன்று அமெரிக்காவின் தாமிர உற்பத்தி 1.2 மில்லியன் மெட்ரிக் டன், ச்சிலியின் தாமிர உற்பத்தி 5.4 மில்லியன் மெட்ரிக் டன்.

பிரேசில் அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமாக இரும்பு தாது உற்பத்தி செய்கிறது 1892 ல் அமெரிக்காவில் மிகப் பெரிய இரும்ப சுரங்கம் கண்டு பிடிக்கப் பட்டு இரும்பு உற்பத்தியில் முன்னனியில் இருந்தது, தற்போது அமெரிக்காவின் இரும்பு தாது கையிருப்பு 2100 மெட்ரிக் டன், இதை விட 7 நாடுகளில் இரும்பு தாது கையிருப்பு அதிகமாக உள்ளது. பிரேசிலின் இரும்புத்தாது கையிருப்பு 8900 மெட்ரிக் டன், அமெரிக்கா உற்பத்தி செய்யும் இரும்புத்தாது வருடத்திற்கு 54 மெட்ரிக் டன், பிரேசிலின் உற்பத்தியோ 250 மெட்ரிக் டன்.

அடுத்து கனடாவும், வெனிசூலாவும் வரும் பத்தாண்டுகளில் எண்ணெய் உற்பத்தியில் முன்னனி வகிக்கப் போகின்றன, தற்போது அமெரிக்கா உற்பத்தி செய்யும் எண்ணெய் ஒரு நாளைக்கு 9 மில்லியன் பீப்பாய்கள், தற்போது அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு 21 பில்லியன் பீப்பாய்கள். வரும் பத்தாண்டுகளில் அண்டை நாடுகளின் எண்ணெய் உற்பத்தி 99 பில்லியன் முதல் 178 பில்லியன் பீப்பாய்கள் இருக்கும், எதிர்காலத்தில் அமெரிக்கா எண்ணெய் உற்பத்தியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும்.

பிரேசிலின் தற்போதைய மாட்டு இறைச்சியின் உற்பத்தி அமெரிக்காவைக் காட்டிலும் இரண்டு மடங்காக உள்ளது, அமெரிக்காவின் மாட்டிறைச்சி உற்பத்தி 800000 மெட்ரிக் டன், பிரேசிலின் உற்பத்தி அளவு 2,200,000 மெட்ரிக் டன் ஆகும். பிரேசிலில், அமெரிக்க கனடா கூட்டுறவுடன் உலகிலேயே மிகப் பெரிய மாட்டிறைச்சி உற்பத்தி தொழிற்ச்சாலை குளிர் பதன வசதியுடன் தொடங்கப் பட்டுள்ளது.

நான்கு சக்தி மிக்க நாடுகளின் (பிரேசில், ரஸ்யா, இந்தியா,சீனா) பணத்தை பொதுவான பணமாக்கி புழக்கத்தில் கொள்ளலாம் என்ற பேச்சு வார்த்தை நடந்து வருகிறது அது வெற்றிகரமாக செயல் பாட்டில் வரும் போது அமெரிக்க டாலர் மதிப்பு வெகுவாக உலக சந்தையில் குறைந்துவிடும். ஏற்கனவே யுரோவின் வருகையால் பல நாடுகள் தன் வர்த்தகத்தை யுரோவிற்கு மாற்றிக் கொண்டுவிட்டன. டாலர் தொடர்ச்சியான வீழ்ச்சியை கண்டுவருகிறது.

இங்கு முக்கியமாக குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால் உலகின் முக்கிய சக்திகள் தங்களுடன் நல்ல நட்புறவுடன் இருக்கிறது, உதாரணத்திற்கு சீனா, பிரேசிலுடன் மிகப் பெரிய ஒப்பந்தங்களில் கையெலுத்திட்டுள்ளது. மிகப் பெரிய தொழிற் சாலை, அதிவேக ரயில் ஆகியவை ஒப்பந்தத்தில் உள்ளவை.

ஒரு சர்வேயில் தெரியவந்திருப்பது, பிரேசில் சுற்றுச் சூழல் தூய்மைக்காக 0.37 சதம் முதலிடு செய்துள்ளது, கனடா 0.25 சதம் முதலீடு செய்துள்ளது, மெக்ஸிக்கோ 0.14 சதம் முதலிடு செய்துள்ளது அமெரிக்கா உலகில் 11வது இடத்தல் உள்ளது இதன் முதலீடு 0.13 சதம் ஆகும்.

இறுதியாக சி.ஐ.ஏ வின் செய்திக் குறிப்புபடி அமெரிக்க எதிர்பாளர்களான, ஜாக்கப் கால்மேன், பிடல் காஸ்ட்ரோ, மானுவல் நோர்கியா, சே குவாரா போன்ற பலரை அமெரிக்காவால் கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை, ஹியுகோ சாவேஸின் அமெரிக்க எதிர்ப்பை தடுக்க முடியவில்லை, 24 மணிநேரத்தில் பிடித்துவிடுவோம் என்று சொன்ன பின்லேடனை இதுவரை பிடிக்க முடியவில்லை.

பல உலக நாடுகளின் கலாச்சாரத்தையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்த, சீர் குலைத்துக் கொண்டிருக்கிற அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியும், செல்வாக்கு சரிவும் கண்டு வருவது மட்டுமல்ல, உலக நாடுகளின் மத்தியில் ஒரு கேவலமான பார்வைக்கு ஆளாகியிருக்கிறது. தன் தரம்கெட்ட ஆட்சியாளர்களால் தான்தோன்றி தனமான ஆட்சியால் உலகின் மரியதையை இழந்து வருகிறது அமெரிக்கா, இதற்கு அமெரிக்க மக்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.

தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

thanks for yahoo finance

புதன், செப்டம்பர் 29, 2010

விண்ணுலகப் பயணம்


விண்ணுலகப் பயணம்
அகில உலகின் அருட்கொடை எம் பெருமான் முகம்மது(ஸல்) அவர்கள் தமக்கு நபித்துவம் கிடைத்தபின் மார்க்க அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்கள், ஏக இறைக் கொள்கையை அன்றய மக்கத்துக் காஃபிர் ஏற்க மறுத்துக் கொண்டிருந்தார்கள். பல இன்னல்களுக்கிடையே தளராமல் ஏகத்துவக் கொள்கையை ரஸீல் (ஸல்) அவர்கள் பரப்பி வந்தார்கள். அப்பொழுது தான் இறைவனிடமிருந்து விண்ணுலக அழைப்பு வந்தது. இறைவன் திருமறையில் பனி இஸ்ராயில் அத்தியாயத்தில் 17:1 ஆயத்தில் பெருமானாரின் விண்ணுலகப் பயணத்தைப் பற்றிக் கூறுகிறான்.
‘(அல்லாஹ்)மிகப் பரிசுத்தமானவன், (முகம்மது(ஸல்)) தன் அடியாரை (சிறப்புற்ற பள்ளியிலிருந்து(கஃபா) மஸ்ஜில் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்(அவ்வாறு அழைத்துக் சென்று) நாம் அதனை சூழ உள்ள பூமிகளை ஆசிர்வதித்துள்ளோம், நம்முடைய திருஷ்டாந்தாங்களைகளை அவருக்கு காண்பிப்பதற்க்காகவே (அழைத்துக் சென்றோம்) நிச்சயமாக (உமதிறைவனாகிய) அவனே செவியுறுவோனும், உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்.
சர்வ வல்லமைப் படைத்த ரஹ்மான் நபி(ஸல்) அவர்களின் விண்ணுலக பயணம் பற்றிய நிகழ்வை இந்த ஆயத்தில் கூறுகிறான், நபி (ஸல்) அவர்களை மக்காவிலிருந்து 40 இரவுகள் ஒட்டகையை ஓட்டினால் கடக்கும் தூரத்திற்கு அழைத்துக் சென்று, அங்கிருந்து விண்பயணத்திற்கு அழைத்துக் சென்றிருக்கிறான், ரஸீல் (ஸல்) வாழ்ந்துக் கொண்டிருப்பது மக்கா, மார்கப் பிரச்சாரம் செய்துக் கொண்டிருப்பது மக்கா, அல்லாஹ் நினைத்திருந்தால் கஃபத்துல்லாவிலிருந்தோ, நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாசலிருந்தே விண்ணுலப் பயணம் அழைத்துக் சென்றிருக்க முடியும் அப்படியிருந்தும் ஏன் அவர்களை மக்காவிலிருந்து அவ்வளவு தூரம் அழைத்துச் சென்று விண்ணுலப் பயணம் நடந்து?
இதை நாம் கொஞ்சம் கூர்ந்து நோக்கினால், நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் ஒரு விசயத்தை உலக மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டி, என்ற உண்மை தெரிய வரும் நபி (ஸல்) அவர்களை ஜிப்ரயில் மூலம் ஏழு வானங்களையும் தாண்டி அழைத்துக் செல்கிறார்கள் இறைவனை சந்திப்பதற்கு, ஒவ்வொரு வானத்திலும் நடக்கும் நிகழ்ச்சிகளை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக ஹதிஸில் விளக்குகிறார்கள், அந்த நிகழ்வுகளையும் பெருமானாரின் விண்ணுலகப் பயணத்தையும் ஏற்க மறுக்கின்றனர்.
இது இயல்பு வானத்தில் நான் அதைப் பார்த்தேன், இதைப் பார்த்தேன் என்று சொன்னால் வானத்தை இதற்கு முன் யார் பார்த்திருகிறார்கள், அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபி(ஸல்) அவர்களைத் தவிர யாரும் பார்த்தில்லை. அப்படியிருக்க அங்கு கண்டதை எப்படி நம்புவார்கள், இதை அறிந்து தான் அல்லாஹ் நபியவர்களை மக்காவிலிருந்து தொலை தூரம் இருக்கும் மஸ்ஜில் அக்ஸாவிலிருந்து அழைத்துக் சென்றான்.
அன்றய மக்கத்துக் காஃபிர்கள் வியாபார நிமித்தம் ஜெருசேலம் சென்றிருக்கின்றனர், நபியவர்கள் சில வினாடிகளில் அங்கு செல்வது சாத்திமே இல்லை,நபியவர்கள் தன் வாழ்நாளில் அங்கு சென்றவர்களுமல்ல. இது உண்மையா என்று அறிந்தக் கொள்ள அவர்கள் நபியவர்களிடம் அங்குள்ள சில அடையாளங்களைக் கேட்டனர் நபியவர்களும் சரியாகச் சொன்னார்கள், சில வினாடிகளில் இவர் இவ்வளவு தூரத்தை கடந்திருப்பாரானால் விண்ணுலகப் பயணும் சாத்தியமே என்பதை நிருபிக்க பிற்காலத்தில் ஒரு சாட்சி வேண்மென்தினால் தான் இறைவன் நபியவர்களை மஸ்ஜிதில் அக்ஸாவிலிருந்து விண்ணுலகப் பயணம் அழைத்துச் சென்றான்.
அல்லாஹ்வே மிக்க அறிந்தவனும் நுண்ணறிவாளனுமாக இருக்கிறான், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

திங்கள், செப்டம்பர் 27, 2010

நீலத் திமிங்கிலம் (BLUE WHALE)

நீலத் திமிங்கிலம் (BLUE WHALE)

இந்த பூமி கிரகத்தில் படைப்பினங்களிலேயே மிகப் பெரியது இந்த நீலத்திமிங்கிலம் டைனோசர்கள் என்படும் மிருகங்களைவிட இரண்டு மடங்கு பெரியது இந்த நீலத் திமிஙகிலங்கள்.

இதன் எளை 200 டன்கள், இது 25 ஆசிய யானைகளை விட கூடுதல் எடையாகும், இது 100 அடி நீளம், நீளவாக்கில் வளரக்கூடியது. இது இரண்டு பஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக நிற்க வைத்தால் வரும் நீளம் வரும். பாஸ்கட் பால் (BASKET BALL COURT) கோர்ட்டை விட நீளமானது.

இது ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவு 4 டன்கள் ஆகும் 64000 பர்கர்களுக்கு (BURGAR) சமம். இதன் இதயம் 450கிகி ஒரு மனிதன் அதன் இதய நரம்புகளுக்குள் ஊர்ந்து செல்ல முடியும்.

இது படைப்பினங்களிலேயே அதிக சத்தம் உண்டாக்கும் விலங்கு ஆகும், இதன் சத்தம் ஜெட் விமான இஞ்சின் சத்தத்தை விட அதிகமாக இருக்கும் (ஜெட் விமான இஞ்சின் சத்தம் 140 டெசிபல்) நீலத்திமிங்கிலம் எழுப்பும் சத்தம் 188 டெசிபல் ஆகும் இது தன் சக திமிங்கிலத்துடன் 1600 கிமீ தூரத்துடன் இருந்தாலும் தொடர்புக் கொள்ள முடியும்.
20 நிமிடங்களுக்கு ஒரு முறை தாவிக் குதிக்கிறது 100 மீட்டர் ஆழம் வரை சென்று வருகிறது, ஏறத்தாழ தன் வாழ்நாள் முழுவதும் கடலின் அடிமட்டத்திலேயே கழிக்கிறது.

கப்பல்கள் கடலில் மணிக்கு 10-15 கிமீ வேகத்தில் செல்கிறது, நீலத்திமிங்கிலங்கள் மணிக்கு 32 கிமீ வேகத்தில் செல்கிறது, ஆபத்து நேரங்களில் ஒரு நாளைக்கு 160 கிமீ துராத்திற்கு பயணம் செய்கிறது.

அது மேல் துளையின் மூலம் பிய்ச்சி அடிக்கும் தண்ணிர் இரண்டு மாடி கட்டிடம் உயரம் செல்லும்.

ஒரு வருட கர்பத்திற்கு பிறகு இது குட்டி ஈனுக்கிறது, அதன் எடை பிறந்த உடன் 2700 கிகி அது 8 மீட்டர் நீளம் இருக்கும், இது ஒரு நாளைக்கு 190 லிட்டர் பால் அருந்தும், 1 மணிக்கு 4.5 கிகி இதன் எடைக் கூடுகிறது, ஒரு நாளைக்கு கூடும் எடை 90 கிகி ஆகும்.

7 – 9 மாதங்களில் இது 15 மீட்டர் நீளத்திற்கு வளர்கிறது, சில நிபுணர்களின் கருத்து கணிப்பு 1 வருடத்தில் 50 சதவீதம் வளர்ச்சி அடைந்து விடுகிறது. இது பாலுறவுக்கு தயாராகும் வயது 5 – 10 ஆகும் இதன் கர்ப காலம் 1 வருடம் ஆகும். ஒரு ஆப்பிரிக்க யானையின் கர்ப காலம் 18 – 22 மாதங்களாகும்.
விலங்கினங்களிலேயே கர்பத்தில் அதிக வேகமாக வளரக்கூடியது இந்த நீலத்திமிங்கிலமாகும் 3 மாதங்களுக்கு பிறகு ஒரு நாளைக்கு 2.5 செ.மி நீளம் வளர்கிறது 7 மாதங்களில் தோரயமாக 3.5 மீட்டர் நீளம் வளர்ந்து விடுகிறது.

இது அட்லாண்டிக் கடலில் சுமார் 2000 மீன்கள் உண்டாகும் என்று கணக்கிடப்படுகிறது. இதை 1960 ஆண்டு Internation whaling commission இதை வேட்டையாடுவதை தடை செய்துள்ளது.

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

சாந்தி அளிக்கும் ஸலவாத்


பிஸ்மில்லாஹ்

அகிலங்களின் அருட் கொடையான எம்பெருமான் நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் அகிலங்களுக்கெல்லாம் ஓர் அருட்கொடை என்று (ரஹ்மத்துல் ஆலமீன்) அகிலங்களின் இறைவன் (ரப்புல் ஆலமீன்) தன் திருமறையில் கூறுகிறான், பெருமானரை அல்லாஹ் இவ்வுலகிற்கு அனுப்பியதன் முக்கிய நோக்கம் மனிதனை மனிதனாக வாழச் செய்வதற்கே. மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் சாந்தி அவசியம்.

அல்லஹ் அவர்களுக்க அளித்த மார்கம் சலாம் என்ற சாந்தியை உள்ளடக்கியதான இஸ்லாம் என்ற அற்புத மார்கத்தை உலகிற்கு அளித்து மனித, ஜின் இனங்கள் சாந்தியாக வாழ வழி செய்தான். இந்த சாந்தியாகப்பட்டது அனைத்து ஜிவராசிகளாலும் தேடப்படுவது, இவ்வுலகில் மட்டும் அல்ல மறுஉலகிலும் மனிதனுக்கு சாந்தியாக வாழ வழி செய்யப்பட்ட மார்கம் தான் இஸ்லாம்.

இந்த மானிட,மற்றும் ஜின் இனங்களின் மீது அல்லாஹ் கொண்ட பெருங்கருணை காரணமாக ரஸீல் (ஸல்) அவர்களையும் அவர்கள் மூலம் சாந்தி மார்கத்தையும் நமக்கு அளித்ததன் நோக்கம் சாந்தி. எங்கும் எப்போதும் சாந்தி நிலவ வேண்டும் என்பதே அல்லாஹ் நோக்கம், மனித, ஜின் இனங்கள் இறை மார்கத்தை சரிவர கடைப் பிடித்தால் சாந்தி நிலவுவது திண்ணம்.

ஆனால் மார்கத்தை சரிவர கடைப்பிடிப்போர் நம்மில் குறைவு, என்றாலும் சாந்தி நிலவ வேண்டும் அதற்காகத்தான் மிக கிருபையாளனான அல்லாஹ் திருமறையில் நமக்கு ஒரு கட்டளையை இறக்குகிறான்; 33:56 ‘ நானும் மலக்குகளும் நபிபெருமான் மீது ஸலவாத் சொல்கிறோம் மூமின்களே நீங்களும் அவர்கள் மீது ஸலவாத் சொல்லுங்கள்’ என்று சொல்கிறான்.

ஸலவாத்தாவது ‘ஸல்லல்லாஹீ அலைகி வஸல்லம்’ இதன் அர்த்தம் நபி (ஸல்) அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்பதாகும் இது நம் அனைவரும் அறிந்ததே, ஆனால் இதை ஏன் அல்லாஹ்வும் மலக்குகளும் சொல்வதுடன் நம்மையும் சொல்லச் சொலகிறான் என்ற உள் அர்த்தத்தை நோக்கும் போது, ஹதிஸே குத்ஸியில் நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் ‘அன மின் நூரல்லாஹ் குல்லு மின்னுரி’ நான் இறையொளியிலிருந்தும் மற்றப் படைப்பினங்கள் எல்லாம் என் ஒளிpயிலிருந்து படைக்கப்பட்டன’ என்றும் ஆக ரஸீல் (ஸல்) அவர்கள் மீது கூறும் ஸலவாத் இந்த பிரபஞ்சம் முழுவதின் மீதும் சாந்தி உண்டாவதாக என்ற அர்த்தத்தை தாங்கி நிற்கிறது.

அகிலங்களின் அருட்கொடையான மானிடத்தின் மீது பேரன்பு கொண்ட ரஸீல் (ஸல்) அவர்களும் ‘என் மீது யார் ஒருவர் ஒரு ஸலவாத் சொல்கிறரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலாவாத் சொல்வதாக’ சொல்கிறார்கள். நாமும், மலக்குகளும் நபி பெருமான் மீது ஸலவாத் சொல்ல சொல்ல அனைத்து ஜவராசிகளின் சாந்திக்காக துஆ செய்கிறோம். அல்லாஹ் ஸலவாத் சொல்வது இந்த பிரபஞ்சம் முழுவதும் சாந்தியுடன் இருக்க ஆசிர்வதிப்பதாகும்.

வேளிபடையாக நபிபெருமான் மீது ஸலாவாத் சொல்வது அல்லாஹ் அவர்கள் தரஜாவை மேன் மேன் உயர்த்த வேண்டி துஆ செய்வது. அந்தரங்கம்மான அர்த்தம் அனைத்து படைப்புகளுகும் சாந்தி வேண்டி துஆ செய்வது.
சாந்தி என்பது அல்லாஹின் மிகப் பெரும் அருட்கொடை அதை அல்லாஹ்வை அன்றி யாரும் கொடுக்க முடியாது. அதை நமக்கு அளிக்கவே நபி பெருமான் மீது ஸலவாத் சொல்ல சொல்கிறான்.

அல்லாஹ் நம் மீதும் இப்பிரபஞ்சத்தின் மீது பேரருள் புரிவானகவும், நபி (ஸல்) அவர்கள் மீது பாலை மணல்களின் எண்ணிக்கை அளவிலும் இறைவன் படைத்த ஜிவராசிகளின் எண்ணிக்கை அளவிலும் ஸலவாத் சொல்வோமாக ஸல்லல்லாஹீ அலா முகம்மது ஸல்லல்லாஹீ அலைகி வஸல்லம்.

சனி, செப்டம்பர் 25, 2010

நம்மைப் பற்றி நாம்



நாம் இந்த உலகில் எத்தனையோ விசயங்களை அறிறோம், பல படைப்புகளை கண்டு பிரமிக்கிறோம், நாமே ஒரு மிகப் பெரிய அதிசயம் என்பதை நம்மை நாம் நோக்கினால் அறியப் பெறுவோம்.

1. மனிதனால் மட்டுமே நேரான கோடு வரைய முடியும்

2. ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 450 மைல் நீளம் முடி வளர்கிறான்

3. மனிதன் சிரிக்கும் போது 17 தசைகள் இயங்குகின்றன.

4. மனித டி.என்.ஏ (D.N.A)யில் 800000 ஜீன்கள் இருக்கின்றன.

5. 4.2 அடிக்கும் குறைவாக உள்ள ஆண்களும், 3.9 அடிக்கும் குறைவாக உள்ள பெண்களும் குள்ளர்களாக கருதப்படுகிறார்கள்

6. மனித ரத்ததில் உள்ள வெள்ளை அணுக்கள் 2 முதல் 4 நாட்கள் வரை வாழ்கின்றன. சிவப்பு அணுக்கள் 3 முதல் 4 மாதம் வரை வாழ்கின்றன.

7. ஒவ்வொரு மனிதனும் 25 மில்லியன் தடைவ தன் வாழ்நாளில் விரல்களை மூடித்திறக்கிறான்.

8. maனித இதயம் அவன் கை முட்டி அளவு இருக்கும் சராசரி மனித இதயத்தின் எடை 0.5 எல்.பி.எஸ் (lbs)

9. மனிpத உடலில் நான்கு வகை மினரல்கள் உள்ளது 1. apatite, 2. oragonite, calcite and 3.chiristoba

10. மனித மூளை, உலகில் உள்ள எல்லா கைபேசிக்கும் ஆகும் மின்சாரத்தை ஒரு நாளில் உற்புத்தி செய்யும்.

11. மனித மூளையில் ஒரு நாளைக்கு ஒரு வினாடிக்கு 100000 வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன.

12. பிறக்கும் குழந்தைகள் (kneecap) எனும் கால் மூட்டு எலும்பு இல்லாமல் பிறக்சகின்றன, அது 2 முதல் 6 வயதில் வளர்ந்து விடுகிறது.

13. மனித நுரையிரல் விரிக்கப் பட்டால் ஒரு டென்னீஸ் கோர்ட் அளவு இருக்கும்.

14. பிறக்கும் குழந்தையின் மூளையில் 14 பில்லியன் செல்கள் இருக்கும், அது அந்த
மனிதன் இறக்கும் வரை கூடுவதே இல்லை, ஆனால் 25 வயதிற்கு பிறகு ஒரு நாளைக்கு 100000 செல்கள் வீதம் குறைக்கிறது, ஒரு நிமிடத்தில் ஒரு பக்கத்தை படிக்கும் போது 70 செல்கள் இறக்கின்றன. 40 வயதுக்கு பின் மூளையில் உள்ள நியுரான்கள் குறைய தொடங்குகின்றன, 50 வயதுக்கு மேல் நியுரான்கள் குறைப்பாட்டால் மூளையின் அளவு சுருங்குகிறது.

15. manitha (man) உடம்பில் உள்ள மொத்த பாக்டீரியாக்களின் எடை 4.4 lbs

16. saராசரி மனிதனுக்கு 2 மில்லியன் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.

17. 1 லிட்டர் வியர்வையில் 540 கலோரி இழப்பீடு ஏற்படுகிறது. பெண்ணை விட ஆணுக்கு 40 சதவீதம் அதிகம் வியர்வை சுரக்கிறது.

18. வலதுப்பக்க நுரையிரல் இடதுப்பக்க நுரையிரலை விட அதிக காற்று நிறைக்கிறது.

19. ஒரு மனிதன் ஒரு நாளைக்க சராசரி 23000 தடவை மூச்சு விடுகிறான்

20. நமது வாயில் 40000 பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

21. நாம் கண்ணை திறந்து கொண்டு ஒரு போதும் தும்ம முடியாது.

22. மனித உடலில் முதுகந்தண்டில் 33 முதல் 34 எலும்புகள் இருக்கின்றன.

23. ஆணைவிட பெண் இரு மடங்கு கண் சிமிட்டுகிறாள்.

24. மனித உடலில் மிகச்சிறிய செல் விந்துவில் உள்ளது.

25. குழந்தைகள் பிறக்கும் போது ஏறத்தாழ 300 எலும்புகளுடன் பிறக்கிறது. மனித உடலில் உள்ள சராசரி எலும்புகளின் எண்ணிக்கை 206.

26. நம் உடலில் 7 சோப்பு கட்டிகள் தயாரிக்கும் அளவு கொழுப்பு இருக்கிறது.

27. உணர்வுகளை மனித உடம்பிலில் நரம்புகள் வினடிக்கு 90 மீட்டல் வேகத்தில் மூளைக்கு கொண்டு செல்கிறது.

28. 37,843,200 தடவை இதயம் ஒரு வருடத்திற்கு துடிக்கிறது.

29. ஊதா நிறக்கண்களை உடையவர்கள் துல்லியமாக வலியை உணர்கிறார்கள்

30. கை நகம் கால் நகத்தைவிட 4 மடங்கு வேகமாக வளர்கிறது.

31. மனித உடலில் வாழ்நாளில் 1000 தடவை தோல் மாறி விடுகிறது.

32. மனித உடலில் உள்ள நரம்புகளின் நீளம் 46 மைல்கள்.

புதன், செப்டம்பர் 22, 2010

வாழ்க்கை எனும் பெருங்கனவு


வாழ்க்கை எனும் பெருங்கனவு

உலகில் உயிரினங்கள அனைத்திலும் தனி சிறப்பு பெற்றது மனித இனம், இந்த பூமி உருண்டையை உல்லாசபுரி ஆக்கியதும் இந்த மனித இனம் தான், இரத்த வெள்ளமாக்குவதும் இந்த மனித இனம் தான், இந்த பூமி உல்லாசபுரி ஆவதற்கும், இரத்த வெள்ளம் பாய்வதற்கும் காரணம் ‘நான்’ என்ற அகங்காரம் தான்.

பூமியில் மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவராசியும் ‘தான்’ என்ற அகங்காரத்துடன் வாழ்வதில்லை, இது உண்மை. மயில் மற்றப் பறவைகளைப் பார்த்து எனக்கு தோகை இருக்கிறது உனக்கிருக்கிறதா என்பது போல் நடந்துக் கொள்வதில்லை, இதே போல் எந்த மிருகமும் நான் வெள்ளை, நீ கருப்பு, நான் உயரம், நீ குள்ளம், நான் அழகு, நீ அவலட்சணம் என்று மமதையுடன் நடந்துக் கொள்வதில்லை. இதற்கு இந்த மிருகங்கள் காரணம் அல்ல, அவை படைக்கப் பட்ட விதமே அப்படித்தான். மிருகங்கள் உணவுக்காக ஒன்று மற்றொன்றைக் கொள்ளும் அல்லது தான் தாக்கப் பட்டால் தற்காப்புக்கு மற்றதைக் கொள்ளும், இது மட்டுமே அதன் டி.என்.ஏ (D.N.A) யில் பதியப்பட்டிருக்கும்.

மனிதனைப் பொறுத்தவரை உடல் உறுப்புகளின் இயக்கம், முடி வளர்ச்சி, உடல் இயக்கம், போன்ற தகவல்கள் செயலியாக(Programe) எழுதப்பட்டு டி.என்.ஏ (D.N.A)யில் பொதியப் பட்டுள்ளது அது தலைமுறை, தலைமுறையாக பிரதி எடுக்கபட்டு மனித இனம் சீராக செயல்பட்டுக் கொண்டுகிறது. ஆனால் பிறக்கும் போது மனித மூளை மட்டும் எந்த நிகழ்வுகளும் பதியப் படாமல் இருக்கிறது, இன்றய ‘நாம்’ நம் மூளையில் பதியப்பட்ட நிகழ்வுகளே, வெறும் நினைவுகள் தாம் ‘நாம்’.

நாம் குழந்தையாய் இருக்கும் வரை நம் டி.என்.ஏ(D.N.A) யில் பதியப்பட்டுள்ளபடி இயக்கங்கள் இயல்பாய் நடக்கும் மலம், சிறுநீர் போன்றவை இயல்பாய் எந்த முன்னேற்பாடும் இன்றி நடக்கும் இதற்கு காரணம் ‘தான்’ என்ற அகங்காரம் இன்னும் மூளையில் பதியப்படவில்லை. ஆக ‘நான்’ என்பதே வளர வளர நாம் பாhக்கும் கேட்கும் விசயங்களின் தொகுப்புதான், மூளை என்ற வன் தகட்டில் (Hard Disk) உள்ள எல்லா நிகழ்வு பதிவுகளையும் பார்மேட்(formate) செய்து அழித்து விட்டோமானால் நாமும் பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள அனைத்துப் படைப்புகளும் இயங்குவது போல் இயங்குவோம் பசி வரும்போது உண்போம், உறக்கம் வரும்போது உறங்குவோம். நான் செய்தேன், என் வீடு, என் நாடு, என் படை, என் இனம் போன்ற உணர்வுகளே தோன்றாது, பெரியவன், சின்னவன், ஜாதி, மதம் எதுவும் இருக்காது.

இதில் ஒரு ரகசியம் என்னவென்றால் இந்த அகங்காரம் நமக்கு படைக்கப் படவில்லை என்றால் உலகம் இத்தனை நாகரிக வளர்ச்சியும் விஞ்ஞான வளர்ச்சியும் பெற்றிருக்காது, நாமும் மற்ற உயிரினங்கள் போல் உண்டு,உறங்கி,புணர்ந்து,எப்போது பிறந்தோம் எப்போது மரித்தோம் என்ற விவரங்கள்; ஏதும் அறியாமல் மரித்திருப்போம் உலகம் தோன்றியவிதமே இருந்திருக்கும்.

‘நான்’ என்பதே மூளையில் பதியப்பட்ட மாய நினவுகள் தான், எது நீ? கையா? காலா? தலையா? உடம்பா? என்னுடைய கை, என்னுடைய கால், என்னுடைய தலை என்று தானே சொல்கிறோம் இதில் ‘என்’ என்பது என்ன? நம் மூளையில் பதியப்பட்ட வெறும் நினைவு தான். நமக்கு என்று தனிபட்ட சக்தி எதுவும் இல்லை, மரங்கள் வளர எந்த சக்தி உதவுகிறதோ, மலைகள் வளர எந்த சக்தி உதவுகிறதோ, அலைகள் வீச எந்த சக்தி உதவுகிறதோ அதே சக்தி தான் இந்த உடல் வளரவும் உதவுகிறது. நமக்கு சுய சக்தி எதுவும் இருந்தால் நாம் அசைவற்ற நிலைக்கு (மரணம்) போகவே மாட்டோமே நம் சுய சக்தியை பயன் படுத்தி இயங்கிக் கொண்டே அல்லவா இருப்போம்.

இந்த ‘தான்’ என்ற எண்ணம் மனிதனுக்கு மட்டுமே வைக்கப்பட்டு மற்ற ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல மலை, கடல், கிரகம் எதற்குமே வைக்கப்படவில்லை அதனால் தான் மற்ற எல்லாவற்றையும் மனிதன் தன் கட்டுக்குள் கொண்டுவர முடிகிறது. ஒரு மலைக்கு அந்த உணர்வு இருக்குமானால் மனிதன் அதன் மீது ஏறும்போது உதறிவிடும் யார் நீ என் அனுமதி இல்லாமல் என் மேல் ஏறுகிறாய் என்று கேட்கும். இதைத் தான் குர்ஆன் கூறுகிறது ‘அனைத்தையும் மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்’ என்று.

மனம் என்ற மாய உறுப்பில் தோன்றும் எண்ணங்கள், மூளை என்ற உறுப்பில் பதியும் மாய எண்ணங்கள், இவை இரண்டிற்கும் ஆன்மாவே காரணம் ஆக இவை ஆன்மவிலிருந்தே தோன்றுகின்றன, ஆன்மாவிலேயே பதியப் படுகின்றன. இதில் தோன்றும் எண்ணங்கள் உடலால் நிறைவேற்றப் படுகின்றன. உதராணத்திற்கு சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது, அந்த தேவையை உடல் நிறைவேற்றுகிறது, சாப்பிட்ட நிறைவு ஆன்மாவில் பதிகிறது. இதுபோன்று எல்லா நினைவுகளும் ஆன்மாவில் பதியப்படுகிறது. மரணம் என்ற நிலை மாற்றம் நிகழும் போது உடல் வேறு நிலைக்கு மாறிவிடுகிறது, பதியப் பட்ட நினைவுகளுடன் ஆன்மா தன்னில் உள்ள நினைவுகள் முற்றும் நீங்கும் வரை அவதியுருகிறது இதையே நரகம் எனலாம். தன்னில் பதிந்த நினைவுகள் முற்றிலும் நீங்கிய ஆத்மா சாந்தி அடைகிறது இதை சொர்கம் எனலாம்.

இதை சிறிய உதாரணம் மூலம் அறியலாம் நம் வாழ்வில் நமக்கு(மனதுக்கு) மிகவும் வேதனை அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்து விட்டால் நடந்த மூன்று நாளைக்கு மிகவும் வேதனையாய் இருக்கும் மனம் ரணமாய் இருக்கும், ஏழு நாள் கழித்து அதைவிட கொஞ்சம் குறைவாய் இருக்கும், நாற்பது நாள் கழித்து அதைவிட கொஞ்சம் குறைவாய் இருக்கும் ஒரு வருடம் கழித்து மனம் கொஞ்சம் மறந்திருக்கும். அது வரை ஆன்மா படும் வேதனை இருக்கிறதே அது தான் நரக வேதனையாய் இருக்கும், இதே போல் தான் இறந்த பிறகும் எல்லா ஆன்மாக்களும் இதை அனுபவித்தே தீரவேண்டும், இதைத் திருக் குர்ஆன் 19:17 ல் ‘நரகை கடக்காமல் யாரும் (போக) முடியாது’ என்று கூறுகிறது. உடலை பிரிந்த எல்லா ஆன்மாக்களும் அந்த நினைகளுடன் பிரிகிறது அது முற்றிலும்மாக அதிலிருந்து விடுதலைப் பெறும் வரை அந்த வேதனையை அனுபவித்து தான் ஆக வேண்டும், இதற்காகத்தான் முன்னோர்கள் உடலைப் பிரிந்த ஆன்மாவுக்கு அதன் நினைவுகளிலிருந்து விடுதலை வேண்டி மூன்றாம் நாள், ஏழாம், நாற்பதாம் நாள் எல்லாம் அன்ன தானம் கொடுத்து எல்லோரையும் பிரார்த்திக்க சொல்லி அந்த பிரார்த்தனையை செய்வார்கள்.

ஆக உடலை பரிந்த ஆன்மா தன் வாழ்நாளில் பதிந்த அத்தனை நினைவுகளையும் உடனடியாக துறக்க முடியாது அதனதன் அறிவு தன்மைக்கு ஏற்ப வலிமைக்கு ஏற்ப அது தன் நினைவை துறக்கும். இதைத் தான் சிலர் மின்னல் வேகத்தில் நரகை கடப்பர், சிலர் குதிரை வேகத்தில் நரகை கடப்பர், சிலர் ஓட்ட வேகத்தில் நரகை கடப்பர் சிலர் அதில் வழுக்கி விழுந்துவிடுவர் என்று ஒரு நபி மொழியில் சொல்லப் படும். இந்த வாழ்வே ஒரு பெருங்கனவு தான் இதிலிருந்து எப்போது வேண்டுமானலும் நாம் விழித்துக் கொள்ளலாம் என்ற விழிப்புணர்வுடன் வாழ்பவன் ஞானி, இதுவே உண்மை என்று இந்த மாய வாழ்கையில் உலல்பவன் அஞ்ஞானி, ஆகவே தான் வாழ்வை தாமரையிலை தண்ணீர் போல வாழ வேண்டும் என்று சொல்வதன் அர்த்தம் இது தான் இலையை கவிழ்த்தால் இலையில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளம் கூட இருக்காது. அது போல் இந்த ஆன்மா உடலை விட்டால் எந்த நினைவும் அதில் பதியாமல் பார்த்துக் கொள்பவனே ஞானி.

ஆகவே தான் ஒரு நபி மொழியில் ‘மரணத்திற்கு முன் மரணம் அடைந்துவிடுங்கள்’ என்று சொல்லப் பட்டிருக்கிறது இதன் அர்த்தம் உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின் துறக்க வேண்டிய நினைவுகளை உடலுடன் இருக்கும் போதே துறந்து விடுங்கள் என்பதாகும். இதை அறிந்து எதிலும் பற்றில்லாமல் வாழ்பவன் இல்லறத் துறவி. எண்ணங்கள் ஆன்மாவில் பதிவதை துறப்பவன் தான் உண்மை துறவி.

கனவு காண்பவர்கள் யாரும் கனவு காண்பதாக காணும் நேரத்தில் உணரமாட்டார்கள், அதே போலத்தான் இந்த உலகில் வாழ்பவர்கள் வாழ்கையில் மூழ்கி இதை கனவு என்று ஏற்க மறுப்பார்கள் திடிரென்று ஒரு நாள் விழிப்பு வரும் உண்மை நிலைமை புரியும் ‘நான்’ என்ற நினைவு வெறும் குறுகிய கால நினைவு என்று அந்த ஆன்மா உணரும், வாழ்கையில் உருவாக்கி வைத்த ‘தான்’ என்ற நினைவுகள் நீங்காமல் அந்த ஆத்மா கஷ்டபடும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நம் பிற்கால வாழ்வை சுகமானதாக்கி வைப்பானாக ஆமின்.

வியாழன், செப்டம்பர் 09, 2010

ஏகத்துவம்

தவ்ஹித்

தவ்ஹித் என்ற வார்தைக்கு அர்த்தம் தெரியாமலே தவ்ஹித் வாதிகள் என்று கூட்டம் புலம்பிக் கொண்டிருக்கிறது தவ்ஹித் என்றால் ஏகத்துவம். ஒன்றை தவிர ஒன்றும் இல்லை என்பது தான் இதன் உண்மையான அர்த்தம் தூய தமிழில் அத்வைதம் என்பார்கள்.
அவனே அனைத்துமாய் இருக்கிறான், சூரா ஹதிதில் இறைவன் சொல்கிறான், ‘அவனே ஆரம்பம் அவனே முடிவு, அவனே அந்தரங்கம் அவனே வெளிரங்கம்” 57:2 ஓன்று ஆரம்பமாகவும் முடிவாகவும் இருக்கும் போது இடையில் வேறு எது இருக்க முடியும், ஆக அதுவே அனைத்தும், இறைவன் தூணிலிமிருக்கிறான் துரும்பிழுமிருக்கிறான் என்ற வார்த்தை இந்த வசனத்தை அடிபடையாகக் கொண்டது.


இறைவனுக்கு நாற்காலி போட்டு வானத்தில் உட்கார வைத்திருப்பவர்கள் எப்படி ஏகத்துவ வாதிகளாக முடியும் இப்போது அதையும் தாண்டி இறைவனுக்கு உருவம் இருக்கிறது என்று மேடைப் போட்டு வாதம் செய்யக் கூடியவர்கள், அந்தரங்கத்திலும் பகிரங்கத்திலும் விக்ரக நிக்ரகம் செய்துவிட்ட இறைநேசர்களை தூசணம் செய்வது மிகவும் சிறுபிள்ளை தனமானது.

மற்றவர்களைப் பார்த்து இவர்கள் ஷிர்க் செய்கிறார்கள் என்று கூறும் பீஜை வாதிகள் இறைவனுக்கு உருவம் கொடுத்து மிகப் பெரிய ஷிர்க் செய்கிறார்கள் எந்த இறைநேசரும் இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்லவில்லை. இவர்கள் எப்படியாவது உருவ வழிபாட்டை கொண்டுவந்து விடலாம் ஒரு இந்து மதத்தைப் போல ஒரு கிறிஸ்த்துவ மதத்தைப் போல இஸ்லாத்தையும் ஆக்கி விடலாம் என்று கனா காணுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க போதுமானவன்.

புதன், ஜூன் 30, 2010

நபி மொழி

1.உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா?

உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?: தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

2.அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
:
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

3.உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? :

யார் ஒரு நாளில் நூறு தடவை سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

4.உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

5.அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?

யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

6.அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

7.அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?

ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

8.ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?

ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

9.சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?

அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10.அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?

ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

11.உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

12.ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா? :

ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

13.மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

14.சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?

: நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)

15.அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?

அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? : விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)

16.நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?

யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

17.மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?

ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

18.சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?

: لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

19.முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?

: யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

20.ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?

: சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

21.உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?

: இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை) سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

திங்கள், ஜூன் 21, 2010

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை



தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

நம் அனைவருக்கும் தாயின் பாசம் தான் தெரியும், நாம் வளர்ந்து நம் வேலைகளை நாமே செய்துக் கொள்கிற வரை நம்மை தாங்கி நிற்பவள் தாய். இந்த காலகட்டங்களில் நமக்கு, பொதுவாக எல்லோருக்குமே தந்தையிடம் பெரிதாக ஈடுபாடு இருக்காது, அம்மா சாப்பாடு ரெடியா? அம்மா என் டிரஸ் ரெடியா? அம்மா ஸ்கூலுக்கு போயிட்டு வரேன் அம்மா எனக்கு பாக்கெட் மணி கொடு, அம்மா அப்பாகிட்டே சொல்லு எனக்கு அது வேணும், இது வேணும் என்று அம்மாவே உலகமாக இருப்போம், அப்பாவிடம் பாசம் இருந்தாலும் ஒரு சிறிய இடைவெளியிருக்கும் அது வயதாக வயதாக பெரிதாகிக் கொண்டே போகும் ஒரு கட்டத்தில் தந்தையும் மகனும் பேசிக் கொள்வதே குறைந்து விடும். நம் தந்தையை நாம் புரிந்து கொள்வது எப்போது என்றால் நாம் தந்தையாகும் போது தான், இந்த சூழ்நிலையில் அப்பா எப்படி கஷ்டப் பட்டிருப்பார் என்பதை நாம் நம் வாழ்கையில் அனுபவிக்கும் போது தான் உணர்வோம்.

தந்தையின் தியாகமும் தாய் செய்யும் தியாகத்திற்கு குறைந்ததல்ல, குடும்பத்தில் அமைதியான, அழகான சுமுக நிலை நிலவ வேண்டுமானால் அதற்கு தந்தையின் பங்கு மிக முக்கியமானது. தந்தை ஒரு குடிகாரராகவோ, மற்ற ஏதும் கெட்டப் பழக்கம் உள்ளவராகவோ இருந்தால் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் மனைவி மக்கள் எல்லாரும் பாதிக்கப்படுவர். வாழ்கைக்கு பொருளாதாரம் மிகவும் முக்கியமானது அது இருந்தால் தான் வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் சுவைக்க முடியும். தந்தை சீரான பொருளாதார வசதி அளித்தால் தான் தாயால் அவள் கடமைகளை சரிவர செய்ய முடியும், குழந்தைக்கு பாலுட்டுவதிலிருந்து பள்ளி கல்லூரிக்கு பணம் கட்டுவது வரை. தந்தையின் பங்கு கட்டிடத்தின் அடியில் இருக்கும் அஸ்திவாரம் போல் வெளியே தெரிவதில்லை.

தாயின் பங்கு வெளிப்படையானது எந்த குழந்தையும் புரிந்து கொள்ளும் தாய் நமக்காக பாடுபடுகிறாள் என்று, ஆனால் தந்தையின் பங்கை புரிந்து கொள்ள நமக்கு வயதும் முதிர்ச்சியும் தேவைப்படுகிறது.

ஒரு தாய் தன் பிள்ளைகளை 10 மாதந்தான் சுமக்கிறாள் ஆனால் தந்தை தன் மனைவி மக்களை இறக்கும் வரை நெஞ்சில் சுமக்கிறான். தன் பிள்ளைகள் செய்யும் தவறுகளை தன்னை கடினமாக்கிக் கொண்டு கண்டிக்கும் போதே தந்தையின் தியாகம் தொடங்கி விடுகிறது. தன் பிள்ளைக்கு தன் மேல் வெறுப்பு வரும் என்று தெரிந்தும் தன் பிள்ளை வழி தவறி விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு நடந்துக் கொள்கிறார்.

ஒருவன் தந்தையாகிவிட்டப் பிறகு தனக்கென்று எதையும் சிந்திப்பதில்லை, இதை பிள்ளைக்கு வாங்கலாம் இதை மனைவிக்கு வாங்கலாம் என்று தனக்கான தேவைகளை முற்றும் குறைத்துக் கொள்கிறான், பொருளாதர வகையில் பாhத்தால் கூலித் தொழிளாலி தந்தை முதல் கோடீஸ்வரத் தந்தை வரை பல விதமான அழுத்தங்களை கஷ்டங்களை பொருளீட்டும் போது சந்திக்க வேண்டி வருகிறது, அனைத்தும் யாருக்கு மனைவி மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான தந்தையர்களின் பிரதான நோக்கமாய் இருக்கும்.

தந்தையைப் பற்றி நாம் உணரும் போது தந்தை நம்முடன் இருக்க மாட்டார், நாம் தந்தையாகும் போது தான் நம் தந்தையைப் பற்றி முழுமையாக உணர்வோம். எங்கோ படித்த ஒரு விசயத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன், 10 வயது வரை என் தந்தையை விட பலசாலி யாரும் இல்லை, என் தந்தைக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறோம் (அதனால் தான் ரயில் எப்படி ஓடுகிறது, விமானம் எப்படி பறக்கிறது என்பது போன்ற கேள்விகள் கேட்கிறோம்) 15 வயசுக்கு பிறகு தந்தை இந்த காலத்துக்கு பொறுந்தாத ஆள் என்று நினைக்கிறோம், 20 வயதுக்கு மேல் என் தந்தைக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறோம், 30 வயதுக்கு மேல் தந்தையிடம் ஆலோசனைக் கேட்டால் நல்லது என்று நினைக்கிறோம், 40 வயதுக்கு மேல் இந்த பிரச்கனைக்கு தந்தை இருந்திருந்தால் நல்ல தீர்வு சொல்லியிருப்பார் என்று நினைக்கிறோம் இது ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்கும் விசயம்.

ஆக தந்தையை நாம் புரிந்துக் கொள்ள வயதும் அனுபவமும் தேவைப் படுகிறது. இன்று நாம் படித்து நல்ல வேவையிலோ, நல்ல தொழிலோ இருப்பதற்கு தந்தை என்ற அந்த ஏணியை பயன் படுத்தித் தான் வந்திருப்போம் (ஏணியை உதைப்பவர் எத்தனையோ பேர்) அதற்கு தான் முன்னோர்கள் சொன்னார்கள் ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்று. தந்தைக்கு நிகர் தந்தையே.

செவ்வாய், ஜூன் 15, 2010

நிலா




நிலா

அடி கள்ளி நிலவே
உன் திரு உருவை
திரைக்குள் மறைத்து
திரு முகம் மட்டும்
வெளிக்காட்டி
கையில் பூக் கணைகளுடன்
பூ உலகில்
பூ எறிய நீ
யாரைத் தேடுகிறாய்

உன் ஒளி முகத்தில்
விழிகளைத் தேடுகிறேன்;
உன் பால் முகத்தில்
பளிங்கு பற்களைத் தேடுகிறேன்
வேண்டாம்!
அதை மறைத்தே வைத்திரு

உன் முகம் பார்த்தே
முகவரி இழந்த நான்
உன் ஒளி விழியால்
மூர்ச்சையாகி விடுவேன்
உன் முகத்திற்கும்
முக்காடுட்டே வைத்திரு
அது தான் பாதுகாப்பு
உனக்கல்ல எனக்கு.

ராஜா கமால்

புதன், ஏப்ரல் 21, 2010

இழப்பதற்கு முன்




இன்று நாம் சகல உறுப்புகளின் முழு வளர்சியுடனும் அதன் சிறப்பான உழைப்புத் திறனுடமும் ஆரோக்கியத்துடன் உலா வருகிறோம். ஓவ்வொரு மனிதனுக்கும் சிறந்த ஆரோக்கியம் இருக்கும் போது தான் அவனால் மற்ற விசயங்களில் கவனம் செலுத்த முடியும். ஆனால் மனிதனோ தான் ஆரோக்கியத்தில் கவனம் செழுத்துவதே இல்லை.

மனிதனிடம் விலை மதிக்க முடியாத வைரமே கையில் இருந்தாலும் அது தன்னிடம் இருக்கும் வரை அதன் மதிப்பு அவனால் கவனத்தில் கொள்ளப் படுவதில்லை. வைரத்தினும் பல கோடி மடங்கு மதிப்பு உள்ள வாழ்கை, ஆரோக்கியம் போன்றவை நம்மால் அலட்சியப் படுத்தப் படுகிறது. வாழ்கையின் இறுதியில் வீணடித்து விட்டோமே என்ற உணர்வு வருகிறது. நம்மால் எந்த பயனும் யாருக்கும் விளையவில்லையே என்று வருந்துவோரே மிக குறைவு.

ஆரோக்கியமும் அப்படித்தான் உடல் நலக்கேடு வந்த பின் தான் ஆரோக்கியத்தின் அருமை புரியும். நிழலின் அருமை வெயிலில் தெரியும், தண்ணீரின் அருமை தாகத்தில் தெரியும், இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்ட அற்புதமான அருட்கொடை, இந்த உடலை உருவாக்குவதில் நமக்கு எந்த விதமான பங்கும் இல்லை, இந்த உடல் நம்மிடம் ஓப்படைக்கப் பட்ட ஒரு அனாமத்து பொருள் அதைப் போற்றி பாதுகாக்க வேண்டியது நம் தலையாய கடமை.

இந்த உடலை சேதப் படுத்தவோ அதன் உறுப்புகளை குழைப்பதற்கோ நமக்கு எந்தவித உரிமையும் இல்லை. இந்த உடல் உங்கள் ஆன்மா இந்த உலகத்தில் வாழ இறைவனால் அளிக்கப் பட்ட வீடு, இது முழுக்க முழுக்க இறைவனால் அளிக்கப்பட்ட நன்கொடை, இந்த வீட்டை சேதப் படுத்த நமக்கு அணுவளவும் உரிமையில்லை, இதை நாம் உணர்கிறோம் இல்லை நாம் குடியிருக்கும் வீட்டை நாம் அறிந்தோ அறியாமலோ சேதப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

புகை பிடிக்கும் பழக்கம் இன்று நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கிறது, புகையிலையை பற்ற வைத்து அதன் கடுமையான புகையை உள்ளிழுத்து விடுகிறோம் நுரையிரலில் அதன் கழிவுகள் படிகிறது இதனால் ஏற்படும் விளைவுகளை இன்று மருத்துவம் கூறிக்கொண்டிருக்கிறது. இறைவன் நம்மீது புரிந்திருக்கும் கருணையைப் பாருங்கள், புறவெளியில் காற்றில் வேறு பல வகையான வாயுகளும் அசுத்தங்களும் கலந்திருக்கின்றன் என்பதற்;;காக நமக்கு வேண்டிய ஆக்ஸிஜனை மட்டும் அவற்றிலிருந்து பிரித்தெடுத்து இரத்ததிற்கு கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான நுண்ணிய அறைகள் கொண்ட நுரையிரலை இறைவன் படைத்திருக்கிறான்.

நாம் என்ன செய்கிறோம் புகையிலையின் நச்சு புகையை உள்ளே செழுத்துகிறோம், அந்த நுரையிரல் வாயிருந்தால் நம்மை சபிக்கும் பாவி மனிதனே இதற்காகவா நான் படைக்கப் பட்டேன் என்று கூறும்.

குடிப்பழக்கமும் அது போல் தான் உடலுக்கு தேவையில்லாத திரவத்தை குடலுக்குள் இறக்குகிறோம் இதனால் கல்லிரல் பெருமளவு பாதிக்கப் படுகிறது. உடலில் சர்கரையின் அளவை இரத்ததில் சரியாக வைத்துக் கொள்ளவும், இரத்ததிலிருந்து நச்சுத் தன்மையை நீக்கவும், இரத்த உற்பத்திக்கும் பயன்படும் கல்லீரல் ஒரு கடுந்திரவத்தால் பாதிக்கப் படுகிறது. இது போன்று உடல் உறுப்புகளை சேதப்படுத்த நமக்கு எந்த உரிமையும் இல்லை.

சுண்டு விரலின் நகத்தைக் கூட நம்மால் உற்பத்தி செய்ய முடியாது என்ற நிலை இருக்கயில் நாம் ஏன் அப்படி செய்கிறோம் என்பது தான் விளங்கவில்லை. இன்னும் சில விசயங்கள் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது விலங்குகள் கூட செய்யாத கடுமையான செயல் கடுமையான போதைப் பொருட்களை மனிதன் உட்கொள்கிறான் ஒரு பத்திரிகையில் படிக்க நேர்ந்த விசயம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது போதைக்காக சில குறைந்த விசமுள்ள விச ஜந்துகளை நாக்கில் கொட்ட வைக்கிறார்களாம் இந்த உடல் எக்கேடு கெட்டால் எனக்கென்ன எனக்கு வேண்டியது இந்த அற்ப சுகம் என்ற நோக்கில் தான் மனிதன் செயல் படுகிறான்.

எங்கோ படித்த கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது, முன்பொரு காலத்தில் ஒரு வழிப் போக்கன் தன் குதிரையில் பிரயாணம் செய்துக் கொண்டிருந்தானாம் ஒரு நாள் இரவு வேளையில் கடற்கரை வழியே பயணிக்க நேர்ந்ததாம் நிலவொளியில் பளிச் பளிச் என்று கடற்கரையில் கொட்டிக் கிடந்த கற்குவியல் மின்னியதாம் அழகாய் இருக்கிறதே என்று தன் சட்டை பைகளில் நிரப்பிக் கொண்டானாம் வழி நெடுக விளையாட்டாக அந்த கற்களை வீசிக் கொண்டே வந்தானாம்.

இறுதியில் ஒரு பட்டினத்தை நெருங்கிய போது பசி வயிற்றைக் கிள்ள உணவருந்த நினைத்தானாம் தன்னிடம் காசு ஏதும் இல்லாமல் போகவே தான் கடற்கரையில் கண்டெடுத்த ஒரு கல் மட்டும் எஞ்சியிருந்ததாம் அதை அங்கிருந்த ஒரு வணிகனிடம் கொடுத்து ஏதேனும் காசு கொடுக்கும் படி கேட்டானாம்.

அந்த வணிகனோ அந்த கல்லைப் பார்த்துவிட்டு இது மிகவும் விலை மதிப்புள்ள கல் இது பல ஆயிரம் வெள்ளிக் காசுகள் பெறும் என்றும் இது போன்று வேறு கற்கள் இருந்தால் தான் எடுத்துக் கொள்வதாகவும் கூறினானாம். வழிப்போக்கன் வேகமாக தன் சட்டைப் பைகளில் தேடினானாம் ஆனால் அவன் கையிpலிருந்ததே கடைசி கல்லாக இருந்ததாம், அந்த வழிப்போக்கன் மிகவும் மனம் வருந்தினானாம் விலை மதிப்புள்ள கற்களை இப்படி வீணடித்து விட்டோமே என்று.

நம் வாழ்நாளும் ஆரோக்கியமும் இப்படித்தான் அந்த விலைமதிப்புள்ள கற்கள் அதன் மதிப்பு கடைசி நாளின் போது தான் தெரியும்.

திங்கள், ஏப்ரல் 19, 2010

செய்ய மறந்தது மறப்பது

செய்ய மறந்தது மறப்பது





நமக்கு வாழ்வில் எது முக்கியம் எது முக்கியமற்றது, எதை முதலில் செய்வது எதை இரண்டாவது செய்வது என்பன முடிவெடுப்பதில் வாழ்கை நெடுகிலும் தடுமாற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. வாழ்கை, ஆரோக்கியம், செல்வம், போன்றவை நம்மிடம் இருக்கும் போது அதன் மதிப்பு தெரிவதில்லை, அவற்றை நாம் இழந்த பின் தான் ஆகா இப்படி செய்திருக்கலாமே அப்படி செய்திருக்காலேமே என்று நினைப்பதுண்டு, இது மனித பலகீனம், நிரந்தர சந்தோசங்களை விட்டு விட்டு தற்காலிக சந்தோசங்களே நம்மை திருப்தி படுத்தி விடுகின்றன. அந்த காலங்களை கடந்த பின்பு இழந்துவிட்ட சந்தர்பங்களை எண்ணி வருந்துகின்றோம்.

என் மனதை தொட்ட கதை ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

நல்ல உடல் ஆரோக்கியமும் செல்வ செல்வாக்குடனும் வாழ்ந்த அரசனுக்கு நான்கு மனைவியர்கள் இருந்தனராம். அரசன் தன் நான்காவது மனைவிக்கு தேவைப்பட்ட ஆடை அணிகலன் எல்லாம் வாங்கிக் கொடுத்து அவளை அன்புடன் பார்த்துக் கொண்டானாம்.

தன் மூன்றாவது மனைவிடமும் அவன் மிகவும் அன்பு செழுத்தினானாம் அவளுடைய ஆசையையும் நிறைவேற்றி வைத்தானாம், ஆனால் அரசனுக்கு, தன்னை விட சிறந்தவன் அவளுக்கு கிடைத்தால் தன்னை விட்டு போய்விடுவாளோ என்ற அச்சமும் இருந்ததாம்.

அரசன் இரண்டாவது மனைவியையும் மனம் கோணாது பார்த்துக் கொண்டானாம் அவளின் தேவையையும் சிறப்பாக நிறைவேற்றி வைத்தானாம், அவளும் அவனிடம் அன்பாக இருந்தாளாம் அவன் தளாந்த சமயங்களில் அவனுக்கு நம்பிக்கையூட்டி கஷ்டமான சமயங்களில் தக்க ஆலோசனை வழங்கி அவனுக்கு மிகவும் உதவியாய் இருந்தாளாம்.

அரசனின் முதல் மனைவியோ மிகவும் நன்றி உள்ளவளாகவும் அரசனை ஆதரவுடன் கவனித்துக் கொள்பவளாகவும் அரசாங்க நிர்வாக சிக்கல்களில் உதவுபவளாகவும் அரசனை உள்ளார நேசிப்பவளாகவும் இருந்தாளாம். அரசனால் இதை உணர முடிந்தாலும் மற்ற மனைவிகளிடம் செலுத்தும் அன்பை செலுத்துவதில்லை முதல் மனைவியிடம் ஆர்வமும் காட்டுவதில்லை ஆனாலும் அவள் தன் கடமையை செய்து வந்தாளாம்.

ஒரு நாள் அரசன் நோயில் விழுந்தானாம், தன் இறுதி காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த அரசன் இவ்வளவு செல்வ செல்வாக்கோடு வாழ்ந்த நாம் இறப்பில் மட்டும் தனியாகி விடப் போகிறோமே என்ற உணர்ந்த அரசன் தன் நான்கு மனைவிகளையும் கூப்பிட்டு, நான் என் வாழ்நாளில் உங்கள் நால்வரையும் சிறப்பாக வைத்திருந்தேன் என் மரண காலம் நெருங்கி கொண்டு வருகிறது என் மரணத்தில் என்னுடன் வரப் போவது யார் என்று கேட்டானாம்.

நான்காவது மனைவி என்னால் முடியாது என்ற ஒரே வார்த்தையுடன் அங்கிருந்து அகன்று விட்டாளாம்;. அரசனின் இதயத்தில் கத்திப பாய்ந்து போன்று உணர்ந்தானாம்

மூன்றாவது மனைவியிடம் கேட்டப் போது அவள் சொன்னாளாம் வாழ்கை மிகவும் விலை மதிக்க முடியாதது உங்களுக்கு பின் நான் வேறோரு திருமணம் செய்துக் கொண்டு வாழ்வேன் என்று கூறி அகன்று விட்டாளாம். இதைக் கேட்டதும் அரசன் மிகவும் நொறுங்கி விட்டானாம்.

இரண்டாவது மனைவியோ என்னால் உங்கள் கூட கடைசி வரை வரமுடியாது உங்கள் கல்லரை வரை வந்து மலர் வைத்து திரும்பி விடுவேன் என்றாளாம். ஓன்றும் சொல்ல முடியாதவனாக அரசன் கண்ணீர் விட்டானாம்.

உண்மையை உணர்ந்த அரசன் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று பரிதவித்தானாம்.

தன்னால் அதிகம் நேசிக்கப் படாத முதல் மனைவியிடம் அவன் எதுவும் கேட்க வில்லையாம் மௌனமாய் இருந்த அரசனிடம் முதல் மனைவி பேசினாளாம் நான் உங்களுடன் வருவேன் நிங்கள் எங்கு சென்றாலும் உங்களுடன் தான் இருப்பேன் உங்கள் சுக துக்கங்களை நான் பகிர்ந்து கொள்வேன் என்றாளாம்.

அரசன் கண்ணிருடன் அவளைப் பார்த்தானம்.

இங்கே நான்கு மனைவிகளாக உருவகப் படுத்தப் படுவது.

நான்காவது மனைவியாக உடலும்

மூன்றாவது மனைவியாக செல்வம், செல்வாக்கு, தகுதி

இரண்டாவது மனைவியாக குடும்பம், உறவினர்

முதலாவது மனைவியாக நம் ஆன்மா

நம் வாழ்நாளில் நம்மால் அதிகம் புறக்கணிக்கப் படுவது நமது ஆன்மா நிலையான நம் ஆன்மாவிற்கு நாம் செய்த நன்மைகள் என்ன? இந்த வாழ்கை, செல்வம், குடும்பம், சந்தோசம் அனைத்தையும் அனுபவிக்க மூலதாரம் இந்த ஆன்மா நாம் அதற்கு செய்தது என்ன என்று எண்ணிப் பார்ப்பது எத்தனைப் பேர். ஆன்ம அறிவே நித்திய, சத்திய அறிவு, மற்ற எல்லாம் உடலுடன் ஒழியும் மாயை. உண்மை அறிவோம் நன்மை பெறுவோம்.