புதன், ஜூன் 30, 2010

நபி மொழி

1.உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா?

உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?: தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

2.அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
:
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

3.உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? :

யார் ஒரு நாளில் நூறு தடவை سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

4.உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

5.அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?

யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

6.அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

7.அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?

ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

8.ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?

ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

9.சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?

அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10.அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?

ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

11.உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

12.ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா? :

ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

13.மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

14.சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?

: நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)

15.அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?

அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? : விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)

16.நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?

யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

17.மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?

ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

18.சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?

: لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

19.முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?

: யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

20.ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?

: சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

21.உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?

: இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை) سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

திங்கள், ஜூன் 21, 2010

தந்தை சொல்மிக்க மந்திரமில்லைதந்தை சொல்மிக்க மந்திரமில்லை

நம் அனைவருக்கும் தாயின் பாசம் தான் தெரியும், நாம் வளர்ந்து நம் வேலைகளை நாமே செய்துக் கொள்கிற வரை நம்மை தாங்கி நிற்பவள் தாய். இந்த காலகட்டங்களில் நமக்கு, பொதுவாக எல்லோருக்குமே தந்தையிடம் பெரிதாக ஈடுபாடு இருக்காது, அம்மா சாப்பாடு ரெடியா? அம்மா என் டிரஸ் ரெடியா? அம்மா ஸ்கூலுக்கு போயிட்டு வரேன் அம்மா எனக்கு பாக்கெட் மணி கொடு, அம்மா அப்பாகிட்டே சொல்லு எனக்கு அது வேணும், இது வேணும் என்று அம்மாவே உலகமாக இருப்போம், அப்பாவிடம் பாசம் இருந்தாலும் ஒரு சிறிய இடைவெளியிருக்கும் அது வயதாக வயதாக பெரிதாகிக் கொண்டே போகும் ஒரு கட்டத்தில் தந்தையும் மகனும் பேசிக் கொள்வதே குறைந்து விடும். நம் தந்தையை நாம் புரிந்து கொள்வது எப்போது என்றால் நாம் தந்தையாகும் போது தான், இந்த சூழ்நிலையில் அப்பா எப்படி கஷ்டப் பட்டிருப்பார் என்பதை நாம் நம் வாழ்கையில் அனுபவிக்கும் போது தான் உணர்வோம்.

தந்தையின் தியாகமும் தாய் செய்யும் தியாகத்திற்கு குறைந்ததல்ல, குடும்பத்தில் அமைதியான, அழகான சுமுக நிலை நிலவ வேண்டுமானால் அதற்கு தந்தையின் பங்கு மிக முக்கியமானது. தந்தை ஒரு குடிகாரராகவோ, மற்ற ஏதும் கெட்டப் பழக்கம் உள்ளவராகவோ இருந்தால் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் மனைவி மக்கள் எல்லாரும் பாதிக்கப்படுவர். வாழ்கைக்கு பொருளாதாரம் மிகவும் முக்கியமானது அது இருந்தால் தான் வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் சுவைக்க முடியும். தந்தை சீரான பொருளாதார வசதி அளித்தால் தான் தாயால் அவள் கடமைகளை சரிவர செய்ய முடியும், குழந்தைக்கு பாலுட்டுவதிலிருந்து பள்ளி கல்லூரிக்கு பணம் கட்டுவது வரை. தந்தையின் பங்கு கட்டிடத்தின் அடியில் இருக்கும் அஸ்திவாரம் போல் வெளியே தெரிவதில்லை.

தாயின் பங்கு வெளிப்படையானது எந்த குழந்தையும் புரிந்து கொள்ளும் தாய் நமக்காக பாடுபடுகிறாள் என்று, ஆனால் தந்தையின் பங்கை புரிந்து கொள்ள நமக்கு வயதும் முதிர்ச்சியும் தேவைப்படுகிறது.

ஒரு தாய் தன் பிள்ளைகளை 10 மாதந்தான் சுமக்கிறாள் ஆனால் தந்தை தன் மனைவி மக்களை இறக்கும் வரை நெஞ்சில் சுமக்கிறான். தன் பிள்ளைகள் செய்யும் தவறுகளை தன்னை கடினமாக்கிக் கொண்டு கண்டிக்கும் போதே தந்தையின் தியாகம் தொடங்கி விடுகிறது. தன் பிள்ளைக்கு தன் மேல் வெறுப்பு வரும் என்று தெரிந்தும் தன் பிள்ளை வழி தவறி விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு நடந்துக் கொள்கிறார்.

ஒருவன் தந்தையாகிவிட்டப் பிறகு தனக்கென்று எதையும் சிந்திப்பதில்லை, இதை பிள்ளைக்கு வாங்கலாம் இதை மனைவிக்கு வாங்கலாம் என்று தனக்கான தேவைகளை முற்றும் குறைத்துக் கொள்கிறான், பொருளாதர வகையில் பாhத்தால் கூலித் தொழிளாலி தந்தை முதல் கோடீஸ்வரத் தந்தை வரை பல விதமான அழுத்தங்களை கஷ்டங்களை பொருளீட்டும் போது சந்திக்க வேண்டி வருகிறது, அனைத்தும் யாருக்கு மனைவி மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான தந்தையர்களின் பிரதான நோக்கமாய் இருக்கும்.

தந்தையைப் பற்றி நாம் உணரும் போது தந்தை நம்முடன் இருக்க மாட்டார், நாம் தந்தையாகும் போது தான் நம் தந்தையைப் பற்றி முழுமையாக உணர்வோம். எங்கோ படித்த ஒரு விசயத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன், 10 வயது வரை என் தந்தையை விட பலசாலி யாரும் இல்லை, என் தந்தைக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறோம் (அதனால் தான் ரயில் எப்படி ஓடுகிறது, விமானம் எப்படி பறக்கிறது என்பது போன்ற கேள்விகள் கேட்கிறோம்) 15 வயசுக்கு பிறகு தந்தை இந்த காலத்துக்கு பொறுந்தாத ஆள் என்று நினைக்கிறோம், 20 வயதுக்கு மேல் என் தந்தைக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறோம், 30 வயதுக்கு மேல் தந்தையிடம் ஆலோசனைக் கேட்டால் நல்லது என்று நினைக்கிறோம், 40 வயதுக்கு மேல் இந்த பிரச்கனைக்கு தந்தை இருந்திருந்தால் நல்ல தீர்வு சொல்லியிருப்பார் என்று நினைக்கிறோம் இது ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்கும் விசயம்.

ஆக தந்தையை நாம் புரிந்துக் கொள்ள வயதும் அனுபவமும் தேவைப் படுகிறது. இன்று நாம் படித்து நல்ல வேவையிலோ, நல்ல தொழிலோ இருப்பதற்கு தந்தை என்ற அந்த ஏணியை பயன் படுத்தித் தான் வந்திருப்போம் (ஏணியை உதைப்பவர் எத்தனையோ பேர்) அதற்கு தான் முன்னோர்கள் சொன்னார்கள் ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்று. தந்தைக்கு நிகர் தந்தையே.

செவ்வாய், ஜூன் 15, 2010

நிலா
நிலா

அடி கள்ளி நிலவே
உன் திரு உருவை
திரைக்குள் மறைத்து
திரு முகம் மட்டும்
வெளிக்காட்டி
கையில் பூக் கணைகளுடன்
பூ உலகில்
பூ எறிய நீ
யாரைத் தேடுகிறாய்

உன் ஒளி முகத்தில்
விழிகளைத் தேடுகிறேன்;
உன் பால் முகத்தில்
பளிங்கு பற்களைத் தேடுகிறேன்
வேண்டாம்!
அதை மறைத்தே வைத்திரு

உன் முகம் பார்த்தே
முகவரி இழந்த நான்
உன் ஒளி விழியால்
மூர்ச்சையாகி விடுவேன்
உன் முகத்திற்கும்
முக்காடுட்டே வைத்திரு
அது தான் பாதுகாப்பு
உனக்கல்ல எனக்கு.

ராஜா கமால்