ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

வருவாயா நீ


வருவாயா நீ

நெஞ்சுக்குள் நேசமாய் நீ
கண்ணுக்குள் கனவாய் நீ
கனவுக்குள் நிலவாய் நீ
வார்த்தைகளில் கவிதையாய் நீ
உடலுக்குள் உயிராய் நீ
வசந்ததில் தென்றலாய் நீ
வாலிபத்தின் வனப்பாய் நீ
வாழ்கையின் தேடலாய் நீ
வயோதிகத்தில் அரவணைப்பாய் நீ
வருத்தத்தில் வருடலாய் நீ
வாசிப்பில் புத்தகமாய் நீ
யோசிப்பில் சிந்தனையாய் நீ
மனசுக்குள் மழையாய் நீ
மாளிகையில் விளக்காய் நீ
உணர்வுகளில் மகிழ்வாய் நீ
பிணிகளில் மருந்தாய் நீ
என் உணவுகளில் விருந்தாய் நீ
நான் தேடும் உறவாய் நீ
என் தேர்வுகளில் அறிவாய் நீ
என் பார்வையில் பரிவாய் நீ
என் உதட்டுக்குள் இனிப்பாய் நீ
என் தேவைக்கு போர்வையாய் நீ
என் அழகுக்கு ஆடையாய் நீ
என் இருட்டுகளில் ஒளியாய் நீ
என் லட்சியத்தின் நம்பிக்கையாய் நீ
என் இரவுகளின் விடிவெள்ளியாய் நீ
என் விடியலின் சூர்யோதயமாய் நீ
என் சோகத்தின் சுமை தாங்கியாய் நீ
என் தாகத்தில் தண்ணீராய் நீ
என் சுவாசத்தில் காற்றாய் நீ
வாழும் காலமெல்லாம்
வாழ வேண்டும்
வருவாயா நீ

மௌனம்


மௌனம்

நீ மௌனமாய்
நிகழ்த்திய
உரையாடல்கள்
என் மனத்தில்
ஒலி நாடாக்களாய்
ஓராயிரம் உண்டு

மறைந்துக் கொண்டு
நீ அனுப்பிய
உன் உருவப் படம்
என் மனதில்
ஒளி நாடாக்களாய்
ஓராயிரம் உண்டு

மௌனமாய் சந்தித்து
மௌனமாய் பேசி
மௌனமாய்
உணர்வுகள் பரிமாறி
மௌனம் நம்
காதல் தேசத்து பாஷை

வாய் திறந்தால்
வழிந்தோடி விடும்
ஆசை என்று
மௌன அணைக்கட்டி
மௌனமாய்
காத்து வருகிறோம்

மௌனத்தில்
வலிமை உண்டு
மௌனத்தில்
ஆற்றல் உண்டு

மௌனம் வார்தைகள்
சாதிக்க முடியாததை
சாதித்து விடும்

மௌனம் ஞானிகளின்
பால பாடம்
நான் மௌனித்திருக்கிறேன்
மனசுக்குள் உன்னோடு
மகிழ்ந்திருக்கிறேன்

நான் மௌனமாய்
இருக்கும் போது தான்
உன் உருவப் படம்
என்னுள் ஒளிபரப்பாகிறது

நான் மௌனமாய்
இருக்கும் போது தான்
சாதனமின்றி
நமக்குள் சம்பாஷனை
நடக்கிறது

நாம் மௌன
சாம் ராஜ்யத்தின்
மன்னர்களாய்
முடி சூட்டிக் கொள்வோம்
மௌனமாய் ஒரு
ஆட்சி செய்வோம்

மௌனம்
வார்தைகளின் மகுடம்
மௌனமே சந்தோசம்
மௌனமே தங்கம்
வார்த்தை வெள்ளிகளை
விலக்கி வைப்போம்
மௌனமாய்
மௌனத்திற்கு ஒரு
விழா எடுப்போம்

பிரிவு


பிரிவு

உணர்வுகளின் கொந்தளிப்பில்
உருகிப் போகிறேன்
உயிரே உனை விட்டு நான்
விலகிப் போகிறேன்
உன் உயிருக்குள் என்
உயிரை புதைத்து போகிறேன்
உயிரின்றி வெறும் உடலாக
திரும்பிப் போகிறேன்
வெறும் உடலோடு உயிருக்காய்
காத்து நிற்கிறேன்

உனை நேசித்த காலங்களை
நினைவில் கொள்கிறேன்
அந்த நினைவுகளால்
நான் இன்று சுவாசிக்கின்றேன்
நெஞ்சுக்குள் ஒரு கவிதை வாசிக்கின்றேன்
அதை நேரில் உனக்கு சொல்ல
மிகவும் ஆசிக்கின்றேன்

பிரிவு எனும் பெருங்கடலில்
தத்தளிக்கிறேன்
சில நேரம் உன் நினைவு எனும்
படகினிலே பயணிக்கிறேன்
காலம் வரும் என்று நானும்
காத்திருக்கிறேன்
இப்போதெல்லாம் நான் உன்னை
கனவில் மட்டுமே
கை பிடிக்கிறேன்




தென்றலாய் நெஞ்சுக்கு
சுகமளிக்கிறாய்
தீயாய் சில நேரம்
சுட்டு வைக்கிறாய்
நீ இல்லாத நேரங்களிலும்
சிரிக்க வைக்கிறாய்
நீ இருந்தும் சில நேரம்
அழுக வைக்கிறாய்

உணர்வுகளால் பொம்மை போல
ஆட்டுவிக்கிறாய்
உன் நினைவுடனே நித்தம் என்னை
உறங்க வைக்கிறாய்
கனவில் கூட வந்து என்னை
கலகம் செய்கிறாய்

சந்திக்கும் நாளொன்றை
சொல்லி அனுப்பு
இனி தாங்காது
என் மனசோட தொண தொணப்பு

ராசாத்திக்கு


ராசாத்திக்கு

கண்ணுக்குள்ள ஒன்ன வச்சு
காலம் பூரா காத்திருப்பேன்
நெல்லுக்குள்ள அரிசிப் போல
நெஞ்சுக்குள்ள ஓன்ன வச்சு
காலம் பூரா பாத்திருப்பேன்
என் எள்ளுப் பூ ராசாத்தி
ஒரு சொல்லு ஒன்னு சொல்ல வேணும்
பக்குவமா பார்த்து சொல்ல
பாக்குத் தோப்பில் காத்திருப்பேன்
உன் கன்னங் கரு விழியும்
கன்னிப் பேசும் கிளி மொழியும்
நெஞ்சுக் குள்ள நீ விட்;ட
ஏவு கணை ஆனதடி
மாலை வெயில் வேளையிலே
மயிலு வரும் சோலையிலே
சோடி தேடும்; ஜாதிப் புறா
சோகமாக நிக்குதடி
சொன்ன வேளை வந்த பின்பும்
சொன்னவளை காணவில்ல
சோகம் வந்து நெஞ்சுக் குள்ள
சௌக்கியமா என்றதடி
வேதனையில் வார்த்த வல்ல
என்னவளை என்ன சொல்ல
உன் கன்னக் குழியினிலே
நான் தடுக்கி விழுந்து புட்டேன்
என் நெஞ்சக் குழியினிலே
ஒன்ன வச்சு மூடிப் புட்டேன்
ஒரு மல்லிகை பூ இங்க
மணந் தேடி நிக்குதடி
மனமிறங்கி நீ கொஞ்சம்
மனசெல்லாம் மணக்க வாடி
என் மனசெல்லாம் மணக்க வாடி

பூத்ததடி மெல்ல


பூத்ததடி மெல்ல

உன்னோடு எனக்கென்ன கோபம்
என் உயிரோடு எனக்கென்ன கோபம்
என்னோடு சண்டையிட்டு
எனக்கென்ன லாபம்

இடம் மாறிப் போய்விட்;ட
இதயங்கள் ரெண்டு
தடம் மாறிப் போய்விட்ட
சோகங்கள் உண்டு

உள்ளத்தில் ஒளித்து
வைத்த ஆசைகள் கோடி
என் உயிர் இங்கே அலையுதடி
உன் உயிரைத் தேடி

எத்தனை நாள் இனி இன்னும்
தாங்க வேண்டும் சோகம்
இனி எப்போதும் தீராதடி
உன்னோட தாகம்

உள்ளுக்குள் ஆசைகள்
கொப்பளித்து மெல்ல
நதி வெல்லமாய் ஓடுதடி
கடலுக்குள் செல்ல

பூட்டி வைத்த ஆசைகள்
பூத்ததடி மெல்ல - அடி
பூப்பெய்த பூவே
இதை யாரிடம் போய் சொல்ல

கட்டணமா


கட்டணமா
அந்த மாலை நேர மஞ்சள் என்ன
உன் நிறமா
நீ- நான் மனசுக்குள் பூட்டி வைத்த
வண்டினமா
துள்ளி வரும் கால்கள் என்ன
மானினமா
உன் மொழிப்பேசும் விழிகள் என்ன
மீனினமா
உன் விரித்து வைத்த கூந்தல் என்ன
மயிலினமா
உன் இனிமையான குரல் என்ன
குயிலினமா
உன் மேனி என்ன வாசம் விசும்
சந்தனமா
நீ மொத்ததில் பூத்து நிற்கும்
பூ மரமா
நித்தம் உன்னைக் காண வேண்டும்
சம்மதமா
உன் நினைவாலே ஆகிப் போனேன்
பைத்தியமா
கொஞ்ச நேரம் வந்து நில்லு
வைத்தியமா
உனக்கு தாலி ஒன்னு கட்டப் போறேன்
சீக்கிரமா
நான் சொன்ன வாக்கு மாறமாட்டேன்
சத்தியமா
இது சட்டென்று கலைந்துப் போக
சொப்பனமா
என்னையே நான் உனக்கு தரப்போறேன்
அர்பணமா
அடி எட்ட நின்று கேள்வி என்ன
சௌக்கியமா
உன்னை கிட்ட வந்து தொட்டுப் பார்க்க
கட்டணமா

அவள்


அவள் 07.06.03

நீங்கள் மொட்டுகள்
மலர்வதை பார்ததில்லையே
அவள் புன் சிரிப்பை பாருங்கள்

மீன்கள் சிறகடித்து
பார்ததில்லையே
அவள் கண்களைப் பாருங்கள்

நிலவுக்கு நாசி வைத்துப்
பார்ததில்லையே
அவள் முகத்தைப் பாருங்கள்

கொடி ஆடைக் கட்டிப்
பார்ததில்iயே
அவள் இடையைப் பாருங்கள்

தென்றலுக்கு கால் முளைத்து
பார்ததில்லையே
அவள் நடையைப் பாருங்கள்

சித்தாரின் சிணுங்கள்
கேட்டதில்லையே
அவள் சிரிப்பொலி கேளுங்கள்

ஒரு கவிதை கையசைத்துப்
பார்ததில்iயே
அவள் கையசைவைப் பாருங்கள்

வெண்ணிலா வீதி வந்துப்
பார்ததில்லையே
அந்தப் பெண்ணிலவைப் பாருங்கள்

பின்னலிட்ட மின்னலைப்
பார்ததில்லையே
அவள் வீட்டு ஜன்னலைப் பாருங்கள்

என் பக்கம் வீசாத என
ஏங்க வைக்கும் அவள்
ஒரு பாவடைக் கட்டிய
பருவக்காற்று

பார்வை பட்டாலே
மனதுக்குள்
மழை பெய்ய வைக்கும் அவள்
ஒரு மலர் வைத்த மழை மேகம்

அவளை
உங்களுக்கும் காட்ட ஆசைதான்
என்ன செய்ய
அவள் கனவு முடிந்ததும்
மறைந்துவிடும் மாயக் கன்னி

சுவாசம்


சுவாசம்

உன் சாயம் பூசாத உதடுகளில் அல்லவா
என் உள்ளம் பரிக்கொடுத்தேன்

பவுடர்களின் பரிச்சயம் காணத
உன் தங்க முகத்தில் அல்லவா
என் முகம் மறந்தேன் - ஐயோ

உன் நினைவுகளின் துரத்தல்
ஓடுகிறேன் ஓட்டத்தின் முடிவிலும்
உன் முகம்

மறக்க முயலுகிறேன் - அது
இறப்பிற்கு பின் தானோ
என் செய்வேன் என்னவளே

இயன்ற மட்டும் விட்டு விட்டேன்
ஆனாலும் உன் நினைவு மொட்டுகள்
மனதுக்குள் மலர்ந்துக் கொண்டு தான்
இருக்கின்றன

மலரைப் பார்க மாட்டேன் என்று
கண்களை மூடிக்கொண்டேன் - ஆனால்
அது பரப்பும் மணத்தை

நான் சுவாசிக்க வில்லை என்றால்
மரணித்து விடுவேன்
உன் நினைவுகள்
என் சுவாசம் கண்ணே

சனி, செப்டம்பர் 20, 2008

காதல் எனபது..

காதல் என்பது
கருத்து பரிமாற்றம் அல்ல
கூடிப் பேசி கலைந்து செல்ல

அது உணர்வுப் பரிமாற்றம்
உணர்வுடன் கூடிய
உயிர் பரிமாற்றம்

ஒரு முறை வெளியேறிய உயிர்
மீண்டும் உடல் புகுவது
எப்படி அசாத்தியமோ
அது போல்
பரிமாரிக் கொண்ட மனங்களும்
அங்கேயே தங்கி விடுகிறது

எப்படி போகிறதென்பதே
தெரியாமல் மனம் பறிபோகும்
ஒரு மாய வித்தை காதல்

அது என்ன மாயமோ
மனம் பறிக்கொடுத்த
மங்கை மட்டும்
உலக அழகியாய்
தெரியும் அதிசயம்

நினைவு வலையில் சிக்கி
சுயம் இழந்து போகும்
சோகச் சம்பவம்
காதலில் மட்டும் தான்
நிகழும்

ஆகவே இளைஞர்களே. . .
காதல் என்பது
கருத்து பரிமாற்றம் அல்ல
கூடிப் பேசி கலைந்து செல்ல

அந்தி வானம் - கவிதை தொகுப்பு



அந்தி வானம்


இந்த


கவிதை தொகுப்பு


நேசித்த


நேசிக்கப்பட்ட


நெஞ்சங்களுக்கு


அர்ப்பணம்

நீர் குமிழி

நீர் குமிழி

ஒரு நீர் குமிழி
நீரிலிருந்து எழும்
நிகழ்ச்சி ஜனனம்
அந்த நீர் குமிழி
நீருடன் இணையும்
நிகழ்ச்சி மரணம்
நீரிலிருந்து எழுந்த நீர் குமிழி
நீரை மறந்து விடுகிறது
நிகழ்கால உருவே
நிஜம் என்று நினைக்கிறது
நீரில் மிதக்கும்; நீர் குமிழி
நீரில் தன் உருவை
இழக்க விரும்புவதில்லை
நீர் குமிழியே நிலை என்று
நிலை மறந்து மிதக்கிறது - அது
நிஜம் மறந்து விட்ட நிலை என்று
நீராகும் போதே தெரிகிறது
நீர் குமிழி, நீர் குமிழிக்கு
செய்யும் உதவி நாம்
நீர் என்தை
நினைவு படுத்துவது
நீரான பின் எல்லா
குமிழிகளும் - தான்
நீரென்பதை உணரும்
அதை நீர் குமிழியிலேயே
உணர்வது தான் உன்னதம்
நேற்று நீராய் இருந்த
நீர் குமிழி
இன்று நீர் குமிழியாய் இருக்கிறது
நாளை நீராய் இருக்கும்
அது இருந்து கொண்டே
இருக்கபோவது நிஜம்


மாற்றங்கள் மட்டுமே
தோற்றங்களாய் நிகழும்
இது பிரபஞ்ச பொது விதி
இந்த உண்மையறிவோம்
தன்னையும் அறிவோம

என்னிடம் வாருங்கள்

என்னிடம் வாருங்கள்

என்னிடம் வாருங்கள்
உங்கள் உணர்வுகளுக்கு
ஒத்தடம் கொடுக்கிறேன்

என்னிடம் வாருங்கள்
மனதின் ரணங்களை
மயிலிறகால் வருடுகிறேன்

என்னிடம் வாருங்கள்
கலங்கி விட்ட நெஞ்சத்தில்
கல் தூண் நாட்டுகிறேன்

என்னிடம் வாருங்கள்
வெறுமையான உள்ளத்திலும்
விழா காலம் ஏற்படுத்துகிறேன்

என்னிடம் வாருங்கள்
உங்கள் கண்களின்
கண்ணீருக்கு கரை கட்டுகிறேன்

என்னிடம் வாருங்கள்
கசந்து விட்ட வாழ்கையிலும்
களிப்பூட்டுகிறேன்

என்னிடம் வாருங்கள்
இழந்து விட்ட நம்பிக்கையை
மீட்டுத் தருகிறேன்

என்னிடம் வாருங்கள்
உங்கள் கனவுக் கோட்டையில்
நிஜத்தில் கால் பதிக்க வழி காட்டுகிறேன்

நிங்கள் விரும்பினாலும்
விரும்பா விட்டாலும்
என்னிடம் வந்தே ஆக வேண்டும்

நான் யார் தெரியுமா
உங்கள் கண்களால் காண முடியா
காலம் நான.;

நெரிசல்கள்

நெரிசல்கள்

அந்த சோகத்திலும்
சொல்ல ஒரு சுகம் உண்டு
மலைக் குவியலை
மலர் குவியலாய்
நம்பும் மனங்கள்

என் சுமைக்கு
ஒரு பேருண்டு
பூக்களிளும்
போர்க் குணம்
நெருங்கிப் பாருங்கள்

புல்வெளியாய் தெரியும்
தூரத்து பச்சைகள்
கால் வைத்து பாருங்கள்
தெரியும் முள்வெளி என்று

சுகம் அளிக்கும்
விசயங்களில்ளெல்லாம்
மறைந்திருக்கும் சோகம்

பொக்கிசம்
கையிலிருப்பது தெரியாமல்
புதையல் தேடும் கூட்டம்

ஏன் என் தனிமையிலும்
எண்ண நெரிசல்கள்
இருப்பது இருட்டறை
இருந்தாலும் மனசுக்குள்
வெளிச்சம்.

உச்சியில்

உச்சியில்

தத்துவ தேடல்கள்
நதிகரையாய் நீளும்

மனதுக்குள் கேள்விகள்
கடல் அலையாய் எழும்

படிக்க படிக்க வளரும்
வாழ்கை பாடம்

பலரும் புரியாமல்
பிறந்து மறையும் சோகம்

பள்ளிப் பிஞ்சுகளுக்கே
பணம் தேடும் பாடம்

நெஞ்சக் குமுறல்கள்
ஓசையின்றி மறையும்

நியாயங்களுக்கு
மவுனப் பூட்டு

நேர்மைக்கு
இருட்டறைச் சிறை

இலக்கணமில்லா
இறையாண்மை

வரம்பு மீறல்களே
வாழ்கைச் சட்டம்

கேவலங்களே
கேளிக்கை


நாணம் இன்று
அவ நாகரிகம்

வசதிகள் மட்டுமே
வாழ்கை லட்சியம்

மனிதம் என்பது
மகான்களுக்கு மட்டும்

ஆம், நாம் இன்று
நாகரிகத்தின் உச்சியில்

இருள்



இருள் திரையில் தோன்றும்
ஒளிக் கோலங்கள் தான்
இந்த பிரபஞ்சப்
பெருவெளி

இதில் தோன்றும்
வெளிச்சப் புள்ளிகள்
இடையில் தோன்றி
இடையில் மறையும்
இடைக்கால நிவாரணம்

இந்த பிரபஞ்சம்
இருளில் தான் மிதக்கிறது
சூரியனின் முகம் காணா
பூமியின் மற்றொரு பக்கம்
மூழ்கி இருப்பது
முழு இருளில் தான்

சூரியனின் ஒளி படருவது
ஒரு சில கோளங்களின்
ஒரு பக்க முகப்பில் தான்
அதையும் தாண்டி
அடர்ந்து இருப்பது
இருள் மட்டும் தான்

இருள் இரவில்
மட்டுமல்ல
இருப்பதே இருள் தான்
சில மணி நேர
வெளிச்சம் தான்
பகல் என்ற மாயையைத்
தோற்றுவிக்கிறது

இங்கு வெளிச்சம் தான்
உண்டாக்கப் படுகின்றன
இருள் அல்ல
இயந்திரங்கள்
ஒளிக்கற்றைகளை
உண்டாக்கும்
இருளை அல்ல

ஒளியின் அருமை
இருளில் தான்
ஒளியைப் பார்க
இருள் வேண்டும்
பொருளை பார்க்க
ஒளி வேண்டும்
ஆனால் இருளைப் பார்க்;;க
இருள் தான் வேண்டும்

பூமி என்ற
புள்ளியை காட்டுவது
வெளிச்சம்.
பிரபஞ்சம் என்ற
பிரமண்டத்தை காட்டுவது
இருள்

இருள்
நிகழ் காலங்களை
மறக்க வைத்து
நித்தியனை
நினைக்க வைப்பது

இருள்
ஆன்மாவிற்கு
அமைதி தரும்
அரும் மருந்து


இருள்
கருப்பை
குழந்தை காணும்
முதல் உலகம்

இருள்
நம் மீது
இறைவனின்
பேரருள

கனவு

கனவுகள்

இது
உறகத்திற்கு பிறகு
இன்னொரு உலகம்
இது நாம் மட்டுமே
காணக் கூடிய
அதிசய உலகம்
இங்கே ஆடுகிறோம்
பாடுகிறோம்
பறக்கிறோம்
சிரிக்கிறோம்
அழுகிறோம்
அச்சப் படுகிறோம்
கற்பனைக்கு எட்டா
இடங்களிலெல்லாம்
கால் பதிக்கிறோம்
எங்கிருந்து
ஒளி பரப்பாகிறது
இந்த திரைப்படம்
இதில்
ஆண்டியாகவும் வரலாம்
அரசனாகவும் வரலாம்
இந்த காட்சிகளின்
இயக்குனன் யார்
இது வரை புரியவில்லை
இது மரணத்திற்கு பின்
மறு உலகம் என்பதன்
முன் உதாரணமோ
இது வரை விஞ்ஞானம்
விளங்க முடியா
விந்தை இது
அந்த கனவுலகில்
நாம் தாம் உலவுகிறோம்
ஆனால் நம் இஷ்டப்படி அல்ல
பிறகு யார் இஷ்டப்படி
விடை யாருக்கும்
தெரியவில்லை
அந்த காட்சிகளில்
நமக்கு இஷ்டப்பட்ட
பாத்திரமில்லை
கொடுக்க பட்ட
பாத்திரம் மாத்திரமே
சிந்தித்து பார்த்தால்
இயக்கத்தின் காரணன் தான்
இதன் இயக்குனனோ
அந்த அரங்கினில்,
காட்சிகளில்
மாற்றம் செய்ய முடியா
ஒரு பார்வையாளனாகத்தான்
நாம் இருக்க முடியும்
ஆம், விழித்nழும் வரை
நாம் ஒரு பார்வையாளனாகத்தான்
இருக்க முடியும்
நாமே நடித்து
நாம் மட்டுமே பார்க்கும்
அதிசய நாடகம்
இந்த கனவு

கை குலுக்குவோம்

கை குலுக்குவோம்

காற்றோடு மேகம்
கை குலுக்கும் போது தான்
மழையாகிறது
மண்ணோடு மழை
கை குலுக்கும் போது தான்
வளமாகிறது
வண்டோடு மலர்
கை குலுக்கும் போது தான்
கனியாகிறது
உளியோடு கல்
கை குலுக்கும் போது தான்
சிலையாகிறது
விரலோடு வீணை
கை குலுக்கும் போது தான்
இசையாகிறது
நாடோடு நாடு
கை குலுக்கும் போது தான்
நட்பாகிறது
கண்ணோடு கண்
கை குலுக்கும் போது தான்
உருவங்கள்
பரிமாறப் படுகிறது
உடலோடு உடல்
கை குலுக்கும் போது தான்
சந்ததியாகிறது
மலரோடு மலர்
கை குலுக்கும் போது தான்
மாலையாகிறது
சூட்டோடு சுடர்
கை குலுக்கும் போது தான்
சுவாலை ஆகிறது
மனிதனோடு மனிதன்
கை குலுக்கும் போது தான்
உறவு வலுவாகிறது


இயற்கை எல்லாம்
கை குலுக்கி மனிதனுக்கு
கற்று தருகிறது
கண்டவுடன் கைகுலுக்குவோம்
உறவை வலுபடுத்துவோம்
இதையெல்லாம்
பேப்பரோடு பேனா
பேசும் போது தான்
கவிதையாகிறது

வியாழன், செப்டம்பர் 18, 2008

விழுந்துவிட்டேன்

விழுந்து விட்டேன்

வாழ்கை எனும் பாதையிலே
வழி நெடுகப் பள்ளங்கள்- அதில்
அறிவுக் கண்; மூடிக் கொண்டு
அறியாமல் விழுந்து விட்டேன்
பள்ளிப் பருவத்திலே
விளையாட்டில் விழுந்து விட்டேன்
கல்லூரிக் காலத்திலோ
காதலிலே விழுந்து விட்டேன்
பொருள் ஈட்டும் காலத்தில்
பொழுது போக்கில்
விழுந்து விட்டேன்
புரியாமல் சில நேரம் பெண்ணின்
புன்சிரிப்பில் விழுந்து விட்டேன்
தெரிந்தே சில நேரம்
தேவைகளில் விழுந்து விட்டேன்
தேவைகள் நிறைவேற
தேடுதலில் விழுந்து விட்டேன்
நிறைவேறா தேவையினால்
வாடுதலில் விழுந்து விட்டேன்
சிந்தனை எனும் சிறகொடிந்து
சீர் கேட்டில் விழுந்து விட்டேன்
அஞ்ஞான பேரிருளில்
அறியாமல் விழுந்து விட்டேன்
விஞ்ஞான மாயையிலும்
வீணாக விழுந்து விட்டேன்
வழி நெடுகப் பள்ளங்களில்
விழுந்து விழுந்து அடிபட்டேன்
அடிபட்ட காயம் இன்னும்
ஆறாமல் நெஞ்சினிலே
விழுந்து விட்ட நான் இன்று
எழுந்து நிற்க முயலுகிறேன்
ஏற்றுக் கொள் என் இறைவா

சுதந்திரம்

சுதந்திரம்

சுதந்திரம் கேட்ட எங்களுக்கு
வெள்ளையன் தந்தது விடுதலை
சுதந்திர இந்தியாவில்
எங்களுக்கு அதிகம்
கிடைப்பது அரிவாள் வெட்டு
வாழ்கையே வாள் முனையில்
என்றாகி விட்டபின்
யாருக்கு இங்கு vaalkai பற்று

ஆள்பவர்களே அழிப்பவர்களாகி
விட்ட இந்த தேசத்தில்
தேசத் தாய் மோசம் போய் விட்டாள்
பாவம் காந்தி
47 ன் நினைவுகளோடு
நாடெங்கும் சிலையாய் நிற்கிறார்

அகிம்சை போதித்த நகரில்
அரக்கர்களின் அட்டகாசம்
உரிமைக்கு போரடுபவர்களுக்கு
தேசம் தந்த பட்டம்
தீவிரவாதி

ஒ. . . இந்திய தாயே
உன் மக்களுக்கு
சம நீதி கிடைக்க
மீண்டும் ஒரு
காந்தி கொடு
எங்களுக்கு சாந்தி கொடு

மண்

மண்

மனிதனின் உயிர் சத்து மண்
விதையை விழுங்கி
விருட்சம் தருவது மண்
தங்கத்தையும் வைரத்தையும்
தன்னுள் கொண்டது மண்
ஆனலும் மமதை என்பது
மண்ணுக்கு தெரியாது

எண்ணிலடங்க உயிரினங்களை
தன்னில் சுமப்பது மண்
விண்ணவரும் வந்து போகும்
சிறப்பு பெற்றது மண்
மலர்களுக்கெல்லாம் மணத்தை
தருவது மண்
உயிர்களுக்கெல்லாம்
உணவை தருவது மண்
ஆனலும் மமதை என்பது
மண்ணுக்கு தெரியாது

விண்ணுயர்ந்த கட்டிடங்களை
தாங்கி பிடித்திருப்பது மண்
நல்லவர்கும் கெட்டவர்கும்
மடி தருவது மண்
ஆனலும் மமதை என்பது
மண்ணுக்கு தெரியாது

விந்தை பல தன்னில்
கொண்டது மண்
விதைக்கப்பட்ட விதைகளை
முளைப்பிப்பது மண் - ஆனால்
புதைக்கப்பட்ட மனிதர்கள் மீண்டும்
மண்தான் என்பதை
நிருபிப்பது மண்

கனி தருவது மண்
மணி தருவது மண்
மனிதனை தந்ததும் மண்
மருந்துக்கு மண்
விருந்துக்கு மண்
தேடியதை கொடுக்கும்
தெய்விக மண்
ஆனலும் மமதை என்பது
மண்ணுக்கு தெரியாது

எனக்கு பிடிக்கும்

எனக்கு பிடிக்கும்

வானம் பிடிக்கும்
பூமி பிடிக்கும்
குளிர் நிலவு பிடிக்கும்
சுட்டெரிக்கும் சூரியன் பிடிக்கும்
மேகம் பிடிக்கும்
மழை பிடிக்கும்
அலை பிடிக்கும்
ஆழ் கடல் பிடிக்கும்
புல் வெளி பிடிக்கும்
புல்லின் மகுடம்
பனித்துளி பிடிக்கும்
கொக்கு பிடிக்கும்
குருவி பிடிக்கும்
ஆறு பிடிக்கும்
ஆற்று மீன்கள் பிடிக்கும்
காடு பிடிக்கும்
காடு வாழ் விலங்கு பிடிக்கும்
பெண் பிடிக்கும்
பெண்ணின் கண் பிடிக்கும்
நகம் பிடிக்கும்
முகம் பிடிக்கும்
முகத்திரண்டு புருவம் பிடிக்கும்
சிறகடிக்கும் சிட்டு பிடிக்கும்
பளபளக்கும் பட்டு பிடிக்கும்
பூவின் அந்த மொட்டு பிடிக்கும்
வியந்து சொல்ல
இனியும் உண்டு
வியக்கும் போது விளைந்தது
வரிகளாய் சமைந்தது.

பூசை

பூசை

உண்மையை விட்டு விட்டு
பொய்க்கு பூசை நடக்கிறது அங்கே

கால்களை இழந்து விட்டு
பாத யாத்திரை போகிறது
ஒரு கூட்டம்

வேல்கள் எல்லாம் வாள்களாக மாறி
மார்பில் பாய்கிறது

நிஜதுக்கு சமாதி நிழலுக்கு வழிபாடு

அவர்கள் இடித்தது மசூதி அல்ல மனிதம்
மனிதத்தை அழித்து விட்டு
மதம் வளர்கும் மாமனிதர்கள்

இவர்கள் சொல்கிறார்கள்
நாங்கள் இந்தியர்கள் என்று
பிறகு நாங்கள் யார்
விடை தருமா
இந்த தேசம்

கணக்கு

வாழ்கை என்பது
வரவுகளற்ற
செலவுக் கணக்கு
இதில் நாம்
அதிகம் போடுவது
தப்புக் கணக்கு

பாதை நெடுகப்
பாவக் கணக்கு
நாம் மறந்து போனது
கேள்விக் கணக்கு

மக்கள் போடும்
மனக் கணக்கு
மாறிப் போகும்
தினக் கணக்கு

வாழ்கை பலருக்கு
சோகக் கணக்கு
சிலர் தினம் காணும்
இன்ப கணக்கு

சிலருக் சொல்ல தெரியா
சொந்தக் கணக்கு
பலர் தினம் எழுதும்
கள்ளக் கணக்கு

இறைவன் போடும்
காலக் கணக்கு
மாற்ற முடியா
மாயக் கணக்கு

வேதம் சொல்லும்
வாழ்கை கணக்கு
வாழ்ந்து விட்டால்
லாபம் உனக்கு

வாழ்கை பலருக்கு
வெறுப்புக் கணக்கு
காட்ட முடியா
கருப்புக் கணக்கு

அரசியல் வாதிக்கு
ஆட்சிக் கணக்கு
ஆள்பவர் போடும்
பதவிக் கணக்கு

மனைவிப் போடும்
மாசக் கணக்கு
கணவன் போடும்
காசுக் கணக்கு

கணக்கு கணக்கு கணக்கு
எங்கும் கணக்கு
எதிலும் கணக்கு
அது புரியாததால் தான்
நமக்குள் பிணக்கு.

புதன், செப்டம்பர் 17, 2008

வாழ்கை

உண்டுகளித்து
உலுத்து போவது
உண்மை என்ற போதிலும்

கொண்டு வந்ததும்கொண்டு
போவதும் ஒன்றுமில்லை
என்ற போதிலும்
வாழ்கை பல நூறுஆண்டுகள்
இங்கு இல்லை என்ற போதிலும்

எத்தனை ஆசை
இந்த வெற்று வாழ்கையிலே
உண்டு சுவைக்கவும்
கண்டு மகிழவும்
கேட்டு இன்பம் கோடி
பெற கடலளவு
உண்டு என்ற போதிலும்

அத்தனையும் கொண்டு
மகிழ்திட மட்டு ஒன்று உண்டு
என்று மனம்
அறிந்த போதிலும்

எத்தனை ஆசை
இந்த வெற்று வாழ்கையிலே
ஆண்டியாய் அரை
வயிராய் வாழ்ந்து
மறைந்தவர் கோடி

கோடி கோடியாய் வைத்து
மாடி மாடியாய் கட்டி
வாழ்ந்து மறைந்தவர்
கோடி

தேடி தேடி பார்பினும்
தேவையில்லா
மனிதன் இல்லா
உலகத்திலே
வாழத்தான் எத்தனை ஆசை
எத்தனை ஆசை.

ஞாயிறு, செப்டம்பர் 14, 2008

மாற்றம்

மாற்றம் என்பது
இயற்கையின் நியதி
நிலை மாறாதிருக்க
நாம் நியதிக்கு அப்பற்பட்டவர்கள் அல்ல
மரணம் என்பதும்
ஒரு நிலை மாற்றம்
விதையின் மரணம்
விருட்சம்
மழையின் மரணம்
நதி
நதியின் மரணம்
கடல்
வித்து மரமாதல்
மரம் வித்தாதல்
வித்து மீண்டும்
மரமாதல்
இயற்கையின் நியதி
நதி கடலாவதும்
கடல் மழையாவதும்
மழை மீண்டும்
நதியாவதும்
இயற்கையின் நியதி
மாற்றம் என்பது
நிகழாதிருந்தால்
இயக்கம் என்பதே
இல்லாதிருக்கும்
இயக்கம் என்பதே
இல்லாதிருந்தால்
இறைமை என்பதேது
இயக்கத்தின் இன்னொரு பெயர்
இறைமை
மாற்றம் என்பது
படைப்பின் பரிணாமம்


வெள்ளி, செப்டம்பர் 12, 2008

மழை


வான் வெளியின் வல்லரசே
உன் பரிவாரங்களுடன்
மேகத்தில் ஆகாய பயணம் செய்யும் நீ
ஆசைப்பட்ட பூமியை மட்டும்
ஆசிர்வதிகிறாய்
உன் பார்வை பட்ட இடமெல்லாம்
பசுமை என்னும் பட்டாடை
உடுத்திக்கொள்ளும்

உன் வருகையால் எங்கள்
மனதுக்குள் மகிழ்ச்சித்தூறல்
உன் வருகையால்
வயல் வெளிகள் எல்லாம்
வயலின் வாசிக்கும்
மரங்கள் ஆனந்த தலையாட்டும்

கருமையாய் நீ mமேகத்தில் முகம் காட்டினால்
தோகை விரித்தாடுவது மயில்கள் மட்டுமல்ல
எங்கள் மனமும் தான்

இடி என்னும் மேல சத்தமும்
மின்னல் என்னும் அலங்கார விளக்கும்
உன் வருகையை எங்களுக்கு
தெரியப்படுத்தும்
நீ வந்த பின்
வாடிய பயிரெல்லாம்
வாழ்த்துப்பாடும்

நீ சென்ற பின்னும்
நிறைந்திருப்பது எங்கள்
மனங்கள் மட்டுமல்ல
ஏரிகளும் குளங்களும்
அணைக்கட்டுகளும் தான்

ஆனால் சில வருடங்களாய்
நீ எங்களோடு இணக்கமாய் இல்லை
அதன் விளைவு
எங்கும் குடிநீர் தட்டுபாடு
வறண்ட பூமியின் சோகப்பாட்டு
வாய்க்கால் ஓடும்
ஓசையில் எழும் நாதத்தை
கேட்க காத்து கிடக்கும்
நாத்துகள்

நீ வராமலே போனதால்
நிலங்களில் இல்லது போனது
விளைச்சல்
அதனால் எங்கள்
உள்ளங்களில் என்றும்
உளைச்சல்
எத்தனை கஷ்டம் எத்தனை கஷ்டம்

இபோதெல்லாம்
வானவர்களுடன் மட்டும் தான்
உன் சகவாசம்
மனிதர்களுடன் நீ ஏன்
மல்யுத்தம் செய்கிறாய்
பாவம் நாங்கள்
பவீனர்கள் தோற்றுவிடுவோம்

கருணையை கருப்பாய்
பார்த்த உன் முகம்
இப்போது வெள்ளையாய்
வேகமாய் எங்களை
கடந்து செல்கிறது
மழை துளிகளால்
நனைந்த எங்கள் முகங்கள்
விளித்துளிகளால் நனைகிறது

எத்துனை முறை அண்ணாந்து
எங்களில் சிலர் செய்யும் குற்றம்
உனக்குள் இந்த சீற்றம்
விரைவில் ஏற்படும் மாற்றம்
விழிகளில் தீரும் ஏமாற்றம்

இதோ இதோ
நீ தூரத்து மண்ணில்
பாதம் பாதிக்கும் ஓசை
நீ மண்ணை முத்தமிடும் போது
ஏற்படும் மண் வாசனை
ஏகல் சுவசகுழலை
புல்லங்குழலாக்குகிரது

இனி பூமி குளித்துவிட்டு
உடுத்திக்கொள்ளும்
புது பட்டு
தாகம் தீர்ந்த மரங்கள்
இனி ராகம் பாடும்
வான் மழைக்கு
எங்கள் வந்தனம்

திங்கள், செப்டம்பர் 08, 2008

நட்பு

கண்டங்கள் கடந்து விட்டாலும்
நெஞ்சில் கனன்று கொண்டிருக்கும்
உறவு
அந்த உறவு

காலங்கள் கடந்து விட்டாலும்
கடல் அலையாய்
மீண்டும் மீண்டும்
இதயத்தை நனைக்கும்
இன்றும் அந்த உறவு


அன்னையிடமும் அருமை
மனைவியிடமும்
பகிர முடியாத அந்தரங்களைஎல்லாம்
பகிர்ந்து கொள்ளும்
அற்புத உறவு அந்த உறவு


சோகங்களையும்
தாகங்களையும்
பகிர்ந்து கொள்ளும்
சத்தான உறவு
அந்த உறவு


உள்ளத்திலும் உதட்டிலும்
ஒருமித்திருக்கும் உறவு
அந்த உறவு


இதற்கு
தாய் வழியும் இல்லை
தந்தை வழியும் இல்லை


அது ஒரு சோகங்களை
இறக்கி வைக்கும்
சுமை தாங்கி

அது ஒரு மகிழ்ச்சியை
பகிர்ந்து கொள்ளும்
பள்ளிக்கூடம்

அது ஒரு பட்டம் பூச்சியாய்
பறந்து மகிழ்ந்த
மலர் வனம்

அது
ஒரு மாறாத
மணம் வீசும் நந்தவனம்


சொற்களால் வடிக்க அது
கம்பர் கால காவியமும் அல்ல
கற்களில் வடிக்க
அது சோழர் கால சிலையும் அல்ல

அது நதியோரத்து

தென்றலின் சுகம் அது
கோடை மலையின்
சாரலின் சுகம் அது

உள்ளத்தால் மட்டுமே

உணர்ந்து கொள்ளும்

அற்புத உணர்வு அது

இந்த உறவுக்கு மட்டும்

என்னவோ தெரியவில்லை

வயசவதே இல்லை

இது ஒளிர்ந்து மறையும்

மத்தாப்பு அல்ல

இது பூத்து உதிரும்

உதிரிபூவும் அல்ல

உதிரும் பூக்கள்

உள்ள உலகில்

உதிரா பூ

இந்த நட்பு

சில நேரங்களில்

சில மனிதர்களிடம்

ஒரு முறை மட்டுமே

பூக்கும் அதிசய பூ

இந்த நட்பு















சனி, செப்டம்பர் 06, 2008

நீ எனக்கு தந்தது


கருணையுடன் என்னை நீ
கரு முட்டைக்குள் நுழைய வைத்தாய்
கரு பையாய் சூழ்ந்து என்னை
காத்து அருளினாய்

நான் சிதைந்து விடாமல் சீராக
என்னை வளர வைத்தாய்
சில மாதங்களில்
சேயாய் என்னை பரிணமிதாய்

கர்பத்தில் நான் இருந்த
காலமெல்லாம் களிப்புடனே
அதில் என்னை இருக்க வைத்தாய்
குழந்தையாய் பிறந்த பின் தான்
பாலுக்கு நான் அழுதேன்

கர்பத்தில் அழுகை என்றால்
என்ன வென்று நானறியேன்
அன்புக்கு முதலிடம் அன்னை என்பார்
அவள் கூட அழுதபின் தான்
பால் கொடுத்தாள்

என் உணர்வறிந்து உணவளித்த
உயர்ந்தவனே
உன் அன்புக்கு உவமானம்
என்ன சொல்வேன்

நான் ஆனந்த உலகத்தில்
மிதந்திருந்தேன்
சுடும் உலகத்தில் பிறந்தவுடன்
கதறி விட்டேன்

மனமிரங்கி அன்னையாய்
நீ எனக்கு ஆறுதல் தந்தாய்
என் மீது அன்பு வைத்தாய்

அங்கங்களை அழகாய் நீ
படைத்தது வைத்தாய்
அறிவு என்னும் அற்புதத்தை
பரிசளித்தாய்
நோய் நொடிகள் தாக்கிடமல்
காத்து வைத்தாய்
உயர் நெறி பயில நல்ல
அன்னை தந்தை எனக்களித்தாய்

நன்மை என்றும் தீமை என்றும்
பிரித்து வைத்தாய்
நன்மையே நாடும்
நல்ல மனம் தந்தாய்

அன்பு பாசம் இறக்கம் போன்ற
அழகான குணம் தந்தாய்
பொருளீட்டி வளம் சேர்க்க
உலக கல்வி தந்தாய்

நேர்வழியை நடப்பதற்கு
காட்டி தந்தாய்
அதிலேயே கைப்பிடித்து
அழைத்து சென்றாய்

தடுக்கப்பட்ட உணவுகளை
தடுத்து கொண்டாய்
தவறான உணர்வுகளை
பூட்டி வைத்தாய்

என்னை நீ பார்க்கிறாய்
என்ற உணர்வு தந்தாய்
தவறிழைத்தால் தண்டிப்பேன்
என்று சொல்லி வைத்தாய்

தக்க சமயத்தில் தாரத்தையும்
சேர்த்து வைத்தாய்
மனம் மகிழ மழலையும்
தந்து வைத்தாய்

தனிமையில் நானிருந்து
தளர்ந்த போது
தன் நம்பிக்கை தந்து நீ
நிறுத்தி வைத்தாய்

எனக்கு பயமான காலங்களில்
பலமாக நீ இருந்தாய்
இத்தனையும் தருகின்றாய்
எங்கே நீ இருக்கிறாய்

என்று நான் தேடிய போது
இங்கே நான் என்று உன்னை
எனக்கு நீ காட்டி தந்தாய்
உன்னை உணர்ந்து வணங்குகின்ற
உள்ளம் தந்தாய்
உயிர் தந்தாய்
உடல் தந்தாய்
உணவு தந்தாய்
உறைவிடம் தந்தாய்
மறை தந்தாய்
மார்க்கம் தந்தாய்
மா நபி தந்தாய்

தன் தாய் தன் தாய்
என்று உன்னை தாயக
கூறி வந்தேன்
நான் தாயினும் மேல் என்று
நிரூபித்தாய்

இன்னும் என் அறிவுக்கு எட்ட


எத்தனையோ தந்தாய்


ஆயுள் முழுக்க அமர்ந்து


இங்கு எழுதினாலும்


நீ செய்திட்ட பேரருள்கள்


தீர்ந்து விடா


தந்தாய்


தருகிறாய்


தருவாய்


என்று உன்னிடம் நான்


தேவை உடையவனாக


இருக்கிறேன்


அத்தனையும் தந்த உனக்கு


நான் என்ன செய்து விட்டேன்


ஒன்றுமில்லை ஒன்றுமில்லை


இத்தனையும் தந்த என் பேரிறைவ


உன் மன்னிப்பையும் தந்து என்னை


மகிழ்விப்பாய்.











நீ


நீ


ஆழ் கடலில் நீலமாய்

அந்தி வானில் மஞ்சளாய்

குளிர் நிலவில் வெண்மையாய்

மலைகளில் கருப்பாய்

இருளாய்

ஒளியாய்

என்னிலடங்க வண்ணங்கள் உனக்கு

கொட்டும் அருவியில் உன் குரல்

வீசும் காற்றில் உன் குரல்

ஓடும் நதியில் உன் குரல்

அலையின் எழுச்சியில் உன் குரல்

குயிலின் கூவலில் உன் குரல்

எழுகின்ற ஓசையெல்லாம் உன் குரல்

காற்றில் உன்னையே சுவாசிக்கிறேன்

இந்த பிரபஞ்சத்தில் உன்னையே வாசிக்கிறேன்

எங்கும் எப்போதும் உன்னையே நேசிக்கிறேன்

உன்னையே உன்னிடம் யாசிக்கிறேன்

எல்லாம் நீயாக பாவிக்கிறேன்

மலர்களில் மணமாய் மகிழ்விகிறாய்

தென்றலாய் சுகமாய் குளிர்விகிறாய்

சின்னதாய் சில நேரம் சோதிகிறாய்

துன்பத்திற்கு பின் இன்பம் என்று போதிகிறாய்

உலகின் மூலமே

ஓங்கார நாதமே

சிரம் பணிந்தேன் உன் பாதமே.

வெள்ளி, செப்டம்பர் 05, 2008

மாநபியே


மானுடத்தின் மீதிறங்கி
மண்ணில் உதித்த மாநபியே
உங்கள் வார்த்தைகள்
இங்கு உலக சட்டம்
உங்கள் வாழ்கை - அது
எங்களுக்கு பல்கழைகழக பாடம்
உண்மையே உங்களிடமிருந்து தான்
உண்மையை கற்றது
இனி வரும் ஜனகோடிக்கும்
நீங்கள் தான் முன் மாதிரி
மின்னும் பொருள்கள்
உங்களிடமிருந்துதான்
ஒளியை பெற்றது
மணக்கும் மலர்கள்
உங்களிடமிருந்துதான்
மணத்தை பெற்றது
நிலவின் குளிர்மை
உங்கள் பார்வை
அன்னையின் அன்பு
உங்கள் அரவணைப்பு
எங்களை மட்டுமா அணைதீர்கள்
உங்களை கொல்ல வந்த
எதிரிகளையும் அல்லவா அணைதீர்கள்
எங்கள் ரஹ்மத்துல் ஆலமீனே
நாங்கள் இன்னும் உங்கள்
அன்பின் ஆழம் அறிய மீனே
அன்பின் ஆழம் அறிய மீனே

வியாழன், செப்டம்பர் 04, 2008

பேரொளியே


பேரொளியே
சத்தியத்தை கொண்டு வந்த சத்தியமே
உங்கள் புகழ் இந்த உலகில் என்றும் நித்தியமே
இந்த மாநிலத்தின் மாற்றம் உங்கள் மாட்சிமையே
மனிதன் மடமை தனை போக்கி வைத்த மாநபியே
அறிவுக்கெல்லாம் அறிவு தந்த பேரறிவே
அகிலம் ஒளிபெறேவே வந்துதித்த பேரொளியே
மாமறையை தங்கி வந்த மன்னவரே
மனிதனை மனிதனாக வாழ வைத்த அருட்பிழம்பே

இந்த பிரபஞ்சம் புகழ் பாடும் முதல் படைப்பே
அந்த மூலவனம் முதலவனனின் முகவரியே
அர் - ரஹ்மான் அனுப்பி வைத்த அருட்கொடையே
மக்க நகர் கண்டெடுத்த மாணிக்கமே
அன்னை ஆமினா ஈன்றெடுத்த அற்புதமே
உங்கள் முத்து முகம் காணவேண்டும் பேரழகே
சில கோரிக்கைகள் உங்கள் முன்னே ஆருயிரே
மறுமையிலும் எங்கள் மானம் காக்க வேண்டும்
எங்கள் மாநபியே
அங்கேயும் உங்கள் அருகிலாக
ஆசிக்கிறேன் அடியவனே
அருள் புரிய வேண்டும் எங்கள் பெருமானே
இன்று உங்கள் புகழ் பாடும்
பேரு பெற்றேன் சிறியவனே
ஏற்று அருள வேண்டும் எங்கள் எஜமானே











குரு நாதர்


குரு நாதர்
மாநபியின் பேரரே
மன்னருக்கு மன்னரே
மறை ஞானம் தந்து எங்கள்
மனம் கவர்ந்த வள்ளலே
சாந்த நபி சொல்லியதை
பாந்தமாக எத்தி வைக்கும்
எந்தலரே எங்கள் குரு நாதரே
பொத்தி வைத்த செய்தி எல்லாம்
மற்றவர் பொத்தி வைத்த செய்த எல்லாம்
எத்தி வைத்தார் எங்கள் குரு
நித்தம் ஞான செய்தி சொல்லி
சித்தம் தினம் மகிழ வைத்த
எங்கள் குரு உயர்வு தனை
என்ன சொல்லி நான் புகழ்வேன்
சத்தியத்தின் சாறெடுத்து
சத்தியமாய் தந்ததெங்கள்
தங்க குரு தானென்பேன்
படைத்தவனும் படைபினமும்
பாருலகும் வானுலகும்
பரந்தவெளி கிரகங்களும்
ஒன்றென்று ஓதி தந்த
எங்கள் குரு உயர்வு தனை
என்ன சொல்லி நான் புகழ்வேன்
மறை ஞான பேழை தன்னை
மாண்புடனே திறந்து வைத்து
ஞான சோறு உண்ண தந்த
அன்பு தந்தை நலம் வாழ
வல்லவனை இறைஞ்சுகிறேன்

புதன், செப்டம்பர் 03, 2008


என்



அன்னை



தந்தைக்கு



அர்பணம்

பூத்து மகிழும் பூக்கள் - கவிதை தொகுப்பு


பூக்கள்
எல்லா பூக்களும்

பூத்து விழுகின்றன
சில பூக்கள் மட்டுமே
பூத்து மகிழ்கின்றன









வணங்க சொன்னேன்
வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்
காணும் யாவும் நானே என்றேன்
காலம் யாவும் நானே என்றேன்


காணமல் இருப்பதும் நானே
எபோதும் இருப்பதும் நானே
காடு மலை கடலும் படைத்தேன்
நட்சத்திர கோளம் படைத்தேன்
சூரியனும் நிலவும் படைத்தேன்
அத்தனையும் படைப்பது எனக்கு
குன் என்ற சொல்லே என்றேன்

வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்

தோன்றுவது என்னில் என்றேன்
மறைவதும் என்னில் என்றேன்
மனிதனையும் ஜின்னையும் படைத்தேன்
மலக்குகளும் நூரில் படைத்தேன்
அதனையும் படைத்து எனக்கு
அடிமைகள் என்றே சொன்னேன்

வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்

கருவுக்குள் உயிரும் நானே
நெருப்புக்குள் உஷ்ணம் நானே
ஆகாய பெருவெளி நானே
அனைத்திலும் உண்மை நானே

வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்

வேதங்களும் விதிகளும் நானே
போதகனும் தூதனும் நானே
போதனைகள் செய்ததும் நானே
வேதனைகள் செய்ததும் நானே

காணும் யாவும் நானே என்றேன்
காலம் யாவும் நானே என்றேன்
காணமல் இருப்பதும் நானே

எபோதும் இருப்பதும் நானே.