வெள்ளி, ஜூலை 10, 2009

அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday)

அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி





மின் இயற்றி அதாவது மின்சார ஜெனரேட்டர் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மின்சாரம் என்பது வெறும் கனவாகவே இருந்திருக்கும். மின்சாரம் இல்லாத உலக வாழ்க்கையை இன்று கற்பனை செய்தும் பார்க்க இயலாது. மேற்கூறிய மின் இயற்றி மற்றும் மின் இயக்கி (Dynamo) ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்களுள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியியல் அறிஞரான மைக்கேல் ஃபாரடே மிகவும் முக்கியமானவராவார். மின்காந்தத் தூண்டல் (Electromagnetic induction) என்ற கோட்பாட்டை 1831 இல் உலகிற்கு வழங்கியவரும் இவரே. அறிவியல் உலகுக்கு இக்கோட்பாட்டினால் விளைந்த பயன்களும், நன்மைகளும் எண்ணிலடங்கா.


மைக்கேல் ஃபாரடே 1791 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22 ஆம் நாள் இங்கிலாந்து நாட்டின் நியூயிங்டன் (Newington) என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை கருமார் தொழில் செய்து வந்தார். ஏழ்மையின் காரணமாக மைக்கேல் தனது 13 ஆவது வயதிலேயே செய்தித்தாள் விற்கும் தொழிலையும், புத்தகக் கட்டமைப்புப் (Book binding) பணியையும் மேற்கோள்ளவேண்டிய நிலைமைக்கு ஆளானார். உலகிற்கு ஒளி வழங்கும் மின்னாற்றலைத் தரும் கருவியைக் கண்டுபிடித்த ஃபாரடே தன் வாழ்நாள் முழுதும் இருளில் உழன்றார். புத்தகக் கட்டமைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த அவர் ஓய்வு நேரத்தில் அப்புத்தகங்களை வாசிக்கத் தவறவில்லை. பல்வேறு நூல்களைப் படித்தார்; அவற்றுள் பிரித்தானியக் கலைக்களஞ்சியமும் (Encyclopedia Britannica), அறிவியல் வேதியல் நூல்களும் அவரைப் பெரிதும் ஈர்த்தன.


ராயல் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ஹம்ப்ரி டேவி (Humphrey Davy) என்பவரின் சொற்பொழிவை 1812 ஆம் ஆண்டு ஃபாரடே கேட்க நேர்ந்தது. டேவி அவர்கள் பெரிய மின்னணு அகராதி ஒன்றைத் தயாரித்தவர்; பொட்டாசியக் கரைசலில் மின்சாரத்தைச் செலுத்தி அடிப்படைப் பொட்டாசியத் தனிமத்தையும் (base-element potassium) கண்டுபிடித்திருந்தார்; மின் வேதியியல் எதிர்வினை (electrochemical reaction) பற்றியும் அவர் ஆய்வு செய்தவர்; மேலும் சுரங்கத் தொழிலாளர்களுக்குப் பயன்படும் டேவி விளக்கையும் (Davy’s Lamp) அவர் கண்டுபிடித்தவராவார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த டேவி அவர்களின் சொர்பொழிவைக் கேட்ட ஃபாரடே, தான் கேட்டவற்றையெல்லாம் ஒரு குறிப்பேட்டில் எழுதிவைத்தார். டேவியின் சொற்பொழிவிலிருந்து, தான் திரட்டிய குறிப்புகளை எல்லாம் ஃபாரடே டேவியிடமே காட்டினார். அதைப் பார்த்த டேவி அவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்; மின்சாரம் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் ஃபாரடேவுக்கு இருந்த ஆர்வத்தை அவர் பெரிதும் பாராட்டினார். ராயல் நிறுவனத்தில் (Royal Institute), டேவி அவர்களின் பரிந்துரையால், ஃபாரடேவுக்கு ஆய்வக உதவியாளர் பணி கிடைத்தது. பின்னர் இருவரும் இணைந்து ஐரோப்பா முழுதும் ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர். பயணம் முடிந்து திரும்பிய பின்னர், கண்ணாடி மற்றும் எஃகுத் துறைகளில் ஃபாரடே ஆய்வு மேற்கொண்டார்; வேதியியல் பகுப்பாய்விலும், கார்பன் குளோரைடுகளைக் கண்டுபிடிக்கும் ஆய்விலும் ஈடுபட்டார். இதன் விளைவாக ஃபாரடே அவர்களால் பென்சீன் (Benzene) கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பெற்றது. தகுந்த அழுத்தத்தைப் பயன்படுத்தி வாயுப் பொருளை நீர்மமாக மாற்றமுடியும் எனவும் 1823 ஆம் ஆண்டில் அவர் நிரூபித்தார்; இதனைக் கண்டு டேவி அவர்கள் பெரிதும் மகிழ்ச்சியுற்றார். மேலும் ராயல் நிறுவனம் இக்கண்டுபிடிப்பைப் பாராட்டி, நிறுவன உறுப்பினர் பதவி (fellow) வழங்கி ஃபாரடேவைக் கெளரவித்தது.


1820 ஆம் ஆண்டு ஹான்ஸ் ஆர்ஸ்டெட் (Hans Oersted) என்பவர் “ஒரு மின்கடத்தியில் (conductor) மின்சாரத்தைச் செலுத்தினால், அது காந்தப் புலத்தை (magnetic field) உண்டாக்கும்” என்பதைக் கண்டறிந்தார். இதற்கு மாறாகக், காந்தப்புலம் மின்னாற்றலை உற்பத்தி செய்ய இயலுமா என்று அறிய ஃபாரடே முயன்றார். இம்முயற்சியின் விளைவாக, மின்காந்தத் தூண்டல் மற்றும் அதன் விதிகள் (Laws of Electromagnetic Induction) ஆகியன அவரால் கண்டுபிடிக்கப்பட்டன. அடுத்து கம்பிவளையம் (wire loop) ஒன்றினுள் காந்தத்தை நகர்த்தினால், அது மின் உற்பத்திக்கு வழி வகுக்கும் என்பதை ஃபாரடே உலகுக்கு வெளிப்படுத்தினார். மேலும் மின்னூட்டம் பெற்ற கம்பி ஒன்றை காந்தத்திற்கு அருகே தொங்கவிட்டால், அக்கம்பி காந்தத்தைச் சுற்றி, சுழன்று வருவதையும் அவர் செய்து காட்டினார். 1831 ஆம் ஆண்டு ஃபாரடே முதன்முதலாக மின் இயக்கி (dynamo) ஒன்றை உருவாக்கினார். இதே சமயத்தில் ஜோசஃப் ஹென்றி என்பவரும் மின் இயற்றி (electric generator) ஒன்றை உருவாக்கி இருந்தார். எனவே மின் இயக்கி, மின் இயற்றி, மின் மாற்றி (transformer) ஆகிய அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமானவர்கள் ஃபாரடேவும், ஹென்றியுமே ஆவர்.


தற்காலத்திய மின்முலாம் பூசும் (electro-plating) செயல் பற்றிய அனைத்து விவரங்களையும் உலகுக்கு அளித்தவர் ஃபாரடே அவர்களே. 1834 ஆம் ஆண்டில் மின்சாரம் மற்றும் வேதியியல் தனிமத்தின் (element) இணைதிறன் (Valency) ஆகியவற்றிற்கு இடையேயுள்ள உறவு முறையை ஃபாரடே தெளிவுபடுத்தி விளக்கினார். மேலும் காந்த ஈர்ப்புத்தன்மை (Paramagnetism), காந்த விலக்குத்தன்மை (diamagnetism) ஆகியவற்றையும் அவர் கண்டுபிடித்தார். 1861இல் ஃபாரடே ராயல் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றார். ஹாம்ப்டன் கோர்ட் (Hampton Court) என்னுமிடத்தில் இங்கிலாந்து நாட்டுப் பேரரசியார் நன்கொடையாக வழங்கிய இல்லத்தில் குடியேறினார். 1867 ஆகஸ்ட் 25 ஆம் நாள் ஃபாரடே இப்பூவுலக வாழ்வை நீத்தார். அவரது ஆய்வுப் பணிகளைப் பாராட்டி மின்சார அறிவியலில் இரண்டு மின் அலகுகள் (electrical units) ஃபாரடே பெயரால் வழங்கப் பெறுகின்றன. ஃபாரடேயின் நட்புக்கு இணையானது அவரது நட்பு மட்டுமே என்று அவரது வழிகாட்டியான டேவி அவர்கள் கூறியுள்ளது மிகவும் பொருத்தமே.



***

2 கருத்துகள்:

சீமாச்சு.. சொன்னது…

ரொம்பப் பயனுள்ள பதிவு. ஃபாரடே பற்றி இயற்பியலிலும், ஆங்கிலத்திலும் பள்ளியில் படித்திருந்தாலும்.. இப்போது இன்னொரு முறை படித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது..

நன்றி

Can you please remove this word verification feature from the comments page?

Rajakamal சொன்னது…

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே