
வாழ்க்கை எனும் பெருங்கனவு
உலகில் உயிரினங்கள அனைத்திலும் தனி சிறப்பு பெற்றது மனித இனம், இந்த பூமி உருண்டையை உல்லாசபுரி ஆக்கியதும் இந்த மனித இனம் தான், இரத்த வெள்ளமாக்குவதும் இந்த மனித இனம் தான், இந்த பூமி உல்லாசபுரி ஆவதற்கும், இரத்த வெள்ளம் பாய்வதற்கும் காரணம் ‘நான்’ என்ற அகங்காரம் தான்.
பூமியில் மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவராசியும் ‘தான்’ என்ற அகங்காரத்துடன் வாழ்வதில்லை, இது உண்மை. மயில் மற்றப் பறவைகளைப் பார்த்து எனக்கு தோகை இருக்கிறது உனக்கிருக்கிறதா என்பது போல் நடந்துக் கொள்வதில்லை, இதே போல் எந்த மிருகமும் நான் வெள்ளை, நீ கருப்பு, நான் உயரம், நீ குள்ளம், நான் அழகு, நீ அவலட்சணம் என்று மமதையுடன் நடந்துக் கொள்வதில்லை. இதற்கு இந்த மிருகங்கள் காரணம் அல்ல, அவை படைக்கப் பட்ட விதமே அப்படித்தான். மிருகங்கள் உணவுக்காக ஒன்று மற்றொன்றைக் கொள்ளும் அல்லது தான் தாக்கப் பட்டால் தற்காப்புக்கு மற்றதைக் கொள்ளும், இது மட்டுமே அதன் டி.என்.ஏ (D.N.A) யில் பதியப்பட்டிருக்கும்.
மனிதனைப் பொறுத்தவரை உடல் உறுப்புகளின் இயக்கம், முடி வளர்ச்சி, உடல் இயக்கம், போன்ற தகவல்கள் செயலியாக(Programe) எழுதப்பட்டு டி.என்.ஏ (D.N.A)யில் பொதியப் பட்டுள்ளது அது தலைமுறை, தலைமுறையாக பிரதி எடுக்கபட்டு மனித இனம் சீராக செயல்பட்டுக் கொண்டுகிறது. ஆனால் பிறக்கும் போது மனித மூளை மட்டும் எந்த நிகழ்வுகளும் பதியப் படாமல் இருக்கிறது, இன்றய ‘நாம்’ நம் மூளையில் பதியப்பட்ட நிகழ்வுகளே, வெறும் நினைவுகள் தாம் ‘நாம்’.
நாம் குழந்தையாய் இருக்கும் வரை நம் டி.என்.ஏ(D.N.A) யில் பதியப்பட்டுள்ளபடி இயக்கங்கள் இயல்பாய் நடக்கும் மலம், சிறுநீர் போன்றவை இயல்பாய் எந்த முன்னேற்பாடும் இன்றி நடக்கும் இதற்கு காரணம் ‘தான்’ என்ற அகங்காரம் இன்னும் மூளையில் பதியப்படவில்லை. ஆக ‘நான்’ என்பதே வளர வளர நாம் பாhக்கும் கேட்கும் விசயங்களின் தொகுப்புதான், மூளை என்ற வன் தகட்டில் (Hard Disk) உள்ள எல்லா நிகழ்வு பதிவுகளையும் பார்மேட்(formate) செய்து அழித்து விட்டோமானால் நாமும் பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள அனைத்துப் படைப்புகளும் இயங்குவது போல் இயங்குவோம் பசி வரும்போது உண்போம், உறக்கம் வரும்போது உறங்குவோம். நான் செய்தேன், என் வீடு, என் நாடு, என் படை, என் இனம் போன்ற உணர்வுகளே தோன்றாது, பெரியவன், சின்னவன், ஜாதி, மதம் எதுவும் இருக்காது.
இதில் ஒரு ரகசியம் என்னவென்றால் இந்த அகங்காரம் நமக்கு படைக்கப் படவில்லை என்றால் உலகம் இத்தனை நாகரிக வளர்ச்சியும் விஞ்ஞான வளர்ச்சியும் பெற்றிருக்காது, நாமும் மற்ற உயிரினங்கள் போல் உண்டு,உறங்கி,புணர்ந்து,எப்போது பிறந்தோம் எப்போது மரித்தோம் என்ற விவரங்கள்; ஏதும் அறியாமல் மரித்திருப்போம் உலகம் தோன்றியவிதமே இருந்திருக்கும்.
‘நான்’ என்பதே மூளையில் பதியப்பட்ட மாய நினவுகள் தான், எது நீ? கையா? காலா? தலையா? உடம்பா? என்னுடைய கை, என்னுடைய கால், என்னுடைய தலை என்று தானே சொல்கிறோம் இதில் ‘என்’ என்பது என்ன? நம் மூளையில் பதியப்பட்ட வெறும் நினைவு தான். நமக்கு என்று தனிபட்ட சக்தி எதுவும் இல்லை, மரங்கள் வளர எந்த சக்தி உதவுகிறதோ, மலைகள் வளர எந்த சக்தி உதவுகிறதோ, அலைகள் வீச எந்த சக்தி உதவுகிறதோ அதே சக்தி தான் இந்த உடல் வளரவும் உதவுகிறது. நமக்கு சுய சக்தி எதுவும் இருந்தால் நாம் அசைவற்ற நிலைக்கு (மரணம்) போகவே மாட்டோமே நம் சுய சக்தியை பயன் படுத்தி இயங்கிக் கொண்டே அல்லவா இருப்போம்.
இந்த ‘தான்’ என்ற எண்ணம் மனிதனுக்கு மட்டுமே வைக்கப்பட்டு மற்ற ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல மலை, கடல், கிரகம் எதற்குமே வைக்கப்படவில்லை அதனால் தான் மற்ற எல்லாவற்றையும் மனிதன் தன் கட்டுக்குள் கொண்டுவர முடிகிறது. ஒரு மலைக்கு அந்த உணர்வு இருக்குமானால் மனிதன் அதன் மீது ஏறும்போது உதறிவிடும் யார் நீ என் அனுமதி இல்லாமல் என் மேல் ஏறுகிறாய் என்று கேட்கும். இதைத் தான் குர்ஆன் கூறுகிறது ‘அனைத்தையும் மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்’ என்று.
மனம் என்ற மாய உறுப்பில் தோன்றும் எண்ணங்கள், மூளை என்ற உறுப்பில் பதியும் மாய எண்ணங்கள், இவை இரண்டிற்கும் ஆன்மாவே காரணம் ஆக இவை ஆன்மவிலிருந்தே தோன்றுகின்றன, ஆன்மாவிலேயே பதியப் படுகின்றன. இதில் தோன்றும் எண்ணங்கள் உடலால் நிறைவேற்றப் படுகின்றன. உதராணத்திற்கு சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது, அந்த தேவையை உடல் நிறைவேற்றுகிறது, சாப்பிட்ட நிறைவு ஆன்மாவில் பதிகிறது. இதுபோன்று எல்லா நினைவுகளும் ஆன்மாவில் பதியப்படுகிறது. மரணம் என்ற நிலை மாற்றம் நிகழும் போது உடல் வேறு நிலைக்கு மாறிவிடுகிறது, பதியப் பட்ட நினைவுகளுடன் ஆன்மா தன்னில் உள்ள நினைவுகள் முற்றும் நீங்கும் வரை அவதியுருகிறது இதையே நரகம் எனலாம். தன்னில் பதிந்த நினைவுகள் முற்றிலும் நீங்கிய ஆத்மா சாந்தி அடைகிறது இதை சொர்கம் எனலாம்.
இதை சிறிய உதாரணம் மூலம் அறியலாம் நம் வாழ்வில் நமக்கு(மனதுக்கு) மிகவும் வேதனை அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்து விட்டால் நடந்த மூன்று நாளைக்கு மிகவும் வேதனையாய் இருக்கும் மனம் ரணமாய் இருக்கும், ஏழு நாள் கழித்து அதைவிட கொஞ்சம் குறைவாய் இருக்கும், நாற்பது நாள் கழித்து அதைவிட கொஞ்சம் குறைவாய் இருக்கும் ஒரு வருடம் கழித்து மனம் கொஞ்சம் மறந்திருக்கும். அது வரை ஆன்மா படும் வேதனை இருக்கிறதே அது தான் நரக வேதனையாய் இருக்கும், இதே போல் தான் இறந்த பிறகும் எல்லா ஆன்மாக்களும் இதை அனுபவித்தே தீரவேண்டும், இதைத் திருக் குர்ஆன் 19:17 ல் ‘நரகை கடக்காமல் யாரும் (போக) முடியாது’ என்று கூறுகிறது. உடலை பிரிந்த எல்லா ஆன்மாக்களும் அந்த நினைகளுடன் பிரிகிறது அது முற்றிலும்மாக அதிலிருந்து விடுதலைப் பெறும் வரை அந்த வேதனையை அனுபவித்து தான் ஆக வேண்டும், இதற்காகத்தான் முன்னோர்கள் உடலைப் பிரிந்த ஆன்மாவுக்கு அதன் நினைவுகளிலிருந்து விடுதலை வேண்டி மூன்றாம் நாள், ஏழாம், நாற்பதாம் நாள் எல்லாம் அன்ன தானம் கொடுத்து எல்லோரையும் பிரார்த்திக்க சொல்லி அந்த பிரார்த்தனையை செய்வார்கள்.
ஆக உடலை பரிந்த ஆன்மா தன் வாழ்நாளில் பதிந்த அத்தனை நினைவுகளையும் உடனடியாக துறக்க முடியாது அதனதன் அறிவு தன்மைக்கு ஏற்ப வலிமைக்கு ஏற்ப அது தன் நினைவை துறக்கும். இதைத் தான் சிலர் மின்னல் வேகத்தில் நரகை கடப்பர், சிலர் குதிரை வேகத்தில் நரகை கடப்பர், சிலர் ஓட்ட வேகத்தில் நரகை கடப்பர் சிலர் அதில் வழுக்கி விழுந்துவிடுவர் என்று ஒரு நபி மொழியில் சொல்லப் படும். இந்த வாழ்வே ஒரு பெருங்கனவு தான் இதிலிருந்து எப்போது வேண்டுமானலும் நாம் விழித்துக் கொள்ளலாம் என்ற விழிப்புணர்வுடன் வாழ்பவன் ஞானி, இதுவே உண்மை என்று இந்த மாய வாழ்கையில் உலல்பவன் அஞ்ஞானி, ஆகவே தான் வாழ்வை தாமரையிலை தண்ணீர் போல வாழ வேண்டும் என்று சொல்வதன் அர்த்தம் இது தான் இலையை கவிழ்த்தால் இலையில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளம் கூட இருக்காது. அது போல் இந்த ஆன்மா உடலை விட்டால் எந்த நினைவும் அதில் பதியாமல் பார்த்துக் கொள்பவனே ஞானி.
ஆகவே தான் ஒரு நபி மொழியில் ‘மரணத்திற்கு முன் மரணம் அடைந்துவிடுங்கள்’ என்று சொல்லப் பட்டிருக்கிறது இதன் அர்த்தம் உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின் துறக்க வேண்டிய நினைவுகளை உடலுடன் இருக்கும் போதே துறந்து விடுங்கள் என்பதாகும். இதை அறிந்து எதிலும் பற்றில்லாமல் வாழ்பவன் இல்லறத் துறவி. எண்ணங்கள் ஆன்மாவில் பதிவதை துறப்பவன் தான் உண்மை துறவி.
கனவு காண்பவர்கள் யாரும் கனவு காண்பதாக காணும் நேரத்தில் உணரமாட்டார்கள், அதே போலத்தான் இந்த உலகில் வாழ்பவர்கள் வாழ்கையில் மூழ்கி இதை கனவு என்று ஏற்க மறுப்பார்கள் திடிரென்று ஒரு நாள் விழிப்பு வரும் உண்மை நிலைமை புரியும் ‘நான்’ என்ற நினைவு வெறும் குறுகிய கால நினைவு என்று அந்த ஆன்மா உணரும், வாழ்கையில் உருவாக்கி வைத்த ‘தான்’ என்ற நினைவுகள் நீங்காமல் அந்த ஆத்மா கஷ்டபடும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நம் பிற்கால வாழ்வை சுகமானதாக்கி வைப்பானாக ஆமின்.