வெள்ளி, அக்டோபர் 24, 2008

பொங்கட்டும் அமைதி


மனிதன் இறைவனின் படைப்பில் ஓர் அற்புத படைப்பு, உலகில் படைக்கப்பட்ட அத்தனை ஜிவராசிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அதி அற்புத சக்தியாகிய அறிவு மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே மனிதன் சகல படைப்புகளிலிருந்தும் வேறுபடுகிறான், உயர்ந்தும் நிற்கிறான். எல்லா படைப்புகளும் அதனதன் வாழும் சூழ்நிலை, தட்பவெப்ப நிலை, கால நிலைக்கு ஏற்ப படைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் மனிதனுக்கு மட்டும் எல்லா சூழ்நிலைகளையும் தனக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளும் அறிவு கொடுக்கப் பட்டிருக்கிறது.

இது போன்ற எத்தனையோ சிறப்புகளைப் பெற்ற மனிதன் இறைவன் கொடுத்த அறிவால் தன்னை எவ்வளவோ உயர்த்திக் கொண்டான், இன்று உலகம் நம் உள்ளங்கையில், அவ்வளவு வேகமான தகவல் தொடர்பு, மனிதன் உலகின் ஒரு மூலையில் நடப்பதை மறு மூலையில் அதே வினாடி பார்கிறான் அத்தனை விஞ்ஞான வளர்ச்சி, ஒரு மணி நேர தூரம் இப்போது ஒரு நிமிடமாகி விட்டது, ஒரு நாள் தூரம் இப்போது ஒரு மணிக்கும் குறைவான தூரமாகிவிட்டது.

மண்ணை அளந்த மனிதன் இன்று விண்ணையும் அளக்கிறான், நிலவுக்கு போனதெல்லாம் பழைய கதை இப்போது பக்கத்து சூரியகுடும்பத்தில் என்ன நடக்கிறது என்று அறியும் வசதி வந்து விட்டது. இன்று மனிதனுக்கு எல்லாம் இருக்கிறது இருந்தும் மனிதம் தொலைந்து விட்டது, தன் அறிவால் தன்னை எத்தனை உயர்த்திக் கொண்டானோ, அத்தனை, அழிவுக்கும் தன்னை தயார் படுத்திக் கொண்டான், அத்தனை அறிவும் மனித வளர்ச்சிக்கு பயன்படாமல் மனித அழிவுக்கும் பயன் படுகிறது. முன்பு ஒரு மனிதன் ஒரு மனிதனை வாளால் வெட்டிக் கொன்றான், இப்போது ஒரு குண்டு ஒரு நாட்டையே அழிக்க போதுமானது, ஜப்பானின் நாகசாகி, உறிரோசிமாவை உலகம் மறந்து விடவில்லை.

ஓவ்வொரு நாடும் தன் நாட்டு வளர்ச்சிப் பணியைவிட, மக்களின் தன் நிறைவைவிட, ராணுவத்திற்கே அதிகம் செலவிடுகிறது, இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல, ஏன்? ஏன்? என்ற மீண்டும் மீண்டும் எழுகிறது, என்ன இல்லை இந்த மனிதனுக்கு, இல்லை என்னதான் தேவை இந்த மனிதனுக்கு என்று மீண்டும் மீண்டும் சிந்திக்கும் போது, எல்லாம் கிடைத்த மனித்னுக்கு ‘தான் என்ற அகந்தை மேலோங்கும் போது அடக்கி ஆள நினைக்கிறான், இவன் எனக்கு கீழ், இந்த நாடு எனக்கு கீழ், இந்த உலகமே எனக்கு கீழ் என்ற ஆதிக்க வெறி மேலோங்குகிறது. ஆதிக்க வெறிபிடித்த ஆயுத பலம் கொண்ட நாடுகள் இன்று ஆடும் வெறியாட்டத்தை உலகம் பார்த்துக் கொண்டு தானிருக்கிறது.

இன்று மட்டுமல்ல மனித நாகரிகம் வளர தொடங்கிய காலத்திலிருந்தே கூடவே வளர்ந்து வந்திருக்கிறத இந்த ஆதிக்க வெறியும், இது போல் வெறியாட்டம் ஆடிய எத்தனையோ வல்லரசுகளின் வாழ்வையும் வீழ்வையும் பார்த்திருக்கிறது இந்த உலகம், வரலாறுகள் சான்று பகர்கின்றன. கடைசியில் கண்ட பலன் என்ன அழிவு அழிவு, மனித உயிர்களின் அழிவு, மனிதத்தின் சிதைவு. உயர்ந்த அறிவு கொண்ட மனிதன் மட்டும் தான் தன் இனம் அழிக்க கங்கணம் கட்டுகிறான், இங்கே மனிதன் மிருகமாகிறான் என்று சொல்ல முடியாது காரணம் மிருகங்களும் இதை செய்வதில்லை.

மிகப் பெரிய அறிவியல் மேதை ஒருவர் கூறுகிறார் விஞ்ஞான கணக்குப் படி உலகம் அழியும் சமயம் தொடங்கி விட்டது, உதாரணத்திற்கு உலகம் இரவு 12 மணிக்கு அழியுமானல் நாம் பகல் 8.30ல் இருக்கிறோம், நாம் வாழும் இந்த காலகட்டம் அற்புதமானது கற்காலத்தில் இருந்து ஏறிவந்த மனிதன் இன்று எல்லா வசதிகளுடன் வாழுகிறான், எவ்வாறு தன் வாழ்வுக்கு எல்லாவற்றையும் உண்டாக்கி வைத்திருக்கிறானோ அதே மனிதன் தன் வீழ்வுக்கும் எல்லவற்றையும் உண்டாக்கி வைத்திருக்கிறான் அதை எல்லாம் விட்டு விலகி அமைதியான வாழ்கைக்கு இந்த காலகட்டம் சிறந்தது என்று கூறுகிறார்;

உயிர் பலிகள் தடுக்கப் படவேண்டும், ராணுவ அத்துமீறல்கள் நிறுத்தப் படவேண்டும், அவரவர் மண் அவரவர்கட்கு விடப் படவேண்டும், மனித உரிமைகள் மதிக்கப் படவேண்டும், ஆயுத உற்பத்தி நிறுத்தப் படவேண்டும், ஆக்கப் பணிகளுக்கு செலவிட வேண்டும், தான் மட்டும் ஆயுதம் வைத்துக் கொள்ளலாம் அடுத்தவன் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற ஆதிக்க வெறி ஒழிக்கப் படவேண்டும், தன்னிடம் இருக்கும் ஆயுதத்தை அழிக்கும் வரை, அடுத்தவரிடம் இருக்கும் ஆயுதத்தை அழிக்கச் சொல்லும் தகுதி இழந்து விட்டோம் என்ற அறிவு வர வேண்டும், இதுவெல்லாம் நடக்க வேணடும் உலகம் ஆயுத பயமும் யுத்த பயமும் இன்றி செழிக்க வேண்டும், மண்ணைப் பற்றிய கவலை விட்டு விண்ணில் செய்யப் படும் செலவு நிறுத்தப் பட வேண்டும்.

உலகம் அமைதியாக, தன்னிறைவாக, மனிதன் மனிதனாக வாழ ஆணவம், ஆதிக்க மனப்பான்மை ஒழிக்கப்பட வேண்டும், எப்படி, எப்போது நடக்கும் ? என்றாவது நடக்கும் நம் சந்ததிகளாவது அதை அனுபவிக்க வேண்டும். இந்த கட்டுரையின் நோக்கம் இதைப் படிப்பவர் ஒரே ஒரு நிமிடம் மனதார உலக அமைதிக்காக பிரார்த்தித்தால் இந்த கட்டுரை அதன் பலனை அடைந்து விட்டது. எங்கும் பொங்கட்டும் அமைதி.
வாழ்க மனித நேயம், வீழ்க அராஜகம்.

2 கருத்துகள்:

mohamedali jinnah சொன்னது…

"இந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி"

"பொங்கட்டும் அமைதி"

எனக்கு அமைதி ?
நீங்கள் சிறப்பாக பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி இருக்கிறீர்கள் அவார்டு கிடைத்து விட்டது .என் பாடு பரிதாபம் .எனக்கு நீங்கள் பரிந்துரை செய்து ஒரு முட்டையாவது கொடுக்க சொல்லுங்கள்.கிளயனூர் இஸ்மத் அவர்களிடம் .
நீங்கள் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்,இதுதான் முக்கிய கருத்து.

Rajakamal சொன்னது…

thank you very much for your kind opinion and apriciation brother