புதன், அக்டோபர் 01, 2008

கடலம்மா எழுதுகிறேன்


கடலம்மா எழுதுகிறேன்

மரக்கலங்களைத் தூளியாக்கி
காற்று வெளியில் ஆட்டி மகிழ்;;த
நானா செய்வேன்
அந்த கொடுஞ் செயலை

மக்களைப் போல்
மடியில் வைத்து தாலட்டி வந்த
நானா செய்வேன்
அந்த கொடுஞ் செயலை

கடலோரம் கொஞ்சி விளையாடிய
பிஞ்சு குழந்தைகளை
அலையாலே மகிழ்வித்த
நானா செய்வேன்
அந்த கொடுஞ் செயலை

கரை வந்து இறங்கி
களைப்போடு உறங்கும்
உங்களை இரவு முழுதும்
அலையாலே குரலெழுப்பி
தாலட்டு பாடிய
நானா செய்வேன்
அந்த கொடுஞ் செயலை

கடலம்மா கடலம்மா என்று
காலம் முழுதும் உறவாடிய
உங்களை என்றுமே
வெறுங்கையாக அனுப்பாத
நானா செய்வேன்
அந்த கொடுஞ் செயலை


வேதனையை சொல்லி
அழக் கூட ஆளில்லாத
அனாதையாகி விட்டேன்
இனி எல்லாரும் எனக்கு
500 மீட்டர் தூரமாம் காரணம்
எல்லோரையும் சுருட்டி விழுங்கிய
சுனாமியாம் நான்

அது இதயமில்லாதவர்கள் கூற்று
இதயத்தின் ஆழத்தில்
விழுந்த பலமான அடியை
இறுக்கி பிடித்து மெதுவாக விட்ட
மூச்சு காற்றிலேயே
முகவரி இழந்து விட்ட
மக்களுக்கு எப்படி சொல்வேன்
என் வேதனை

எய்தவனுருக்க அம்பென்ன செய்யும்
எங்கு சொல்வேன் என் சோகம்
அடி விழுந்த அதிர்ச்சியையே
தாங்க முடியா என் குழந்தைகள்
அடி எப்படி தாங்கும்

பண் பாடியே பார்த்த
என் முகத்தில் பயம் பார்த்த
பயத்திலேயே மாண்டு விட்டனர்
என் அன்பு குழந்தைகள்
இதோ அவர்கள் இறந்த பின்பும்
மடியில் வைத்து தாலட்டுகிறேன்
இறக்கி விட மனமில்லாமல்

பாவம் அந்த பாய்மர மக்கள்
ஒரு நாள் அறிவர்
இந்த அன்னையின் அன்பை
என்றும் அன்புடன் கடலம்மா.

2 கருத்துகள்:

கலையரசன் சொன்னது…

//இனி எல்லாரும் எனக்கு
500 மீட்டர் தூரமாம் காரணம்
எல்லோரையும் சுருட்டி விழுங்கிய
சுனாமியாம் நான்//

நான் ரசித்த வரிகள்.. அருமை!!

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி kalayarasab.